Friday 9 October 2015

 ஜப்பானில் மிதிவண்டிகள் ‍- Bicycles in Japan

ஜப்பான் வந்த சமயத்தில்,  புதிய‌ மிதி வண்டி வாங்க வீட்டின் அருகில் உள்ள‌ பெரிய வணிக வளாகத்திற்கு சென்றேன்

சைக்கிள் விற்பனையின் பொழுது கடைக்காரர்  எனது பெயர் மற்றும் இதர தகவல்களை கேட்டு அதை பதிவு செய்து ஒரு புத்தகமாக தந்தார்.பின்னர் மிதி வண்டியில் பதிவு எண் உட்பட அனைத்து தகவலும் அச்சிட்டு   ஒட்டுதாளில் (sticker) பதித்து விட்டார் ஒரு வேளை மிதி வண்டி பழுது பார்த்தலுக்கான கியாரண்டி அட்டையாக இருக்கும் என நினைத்து கேட்டால், அது மிதிவண்டி உரிமையாளருக்கான உரிமம் என்று சொன்னார். மேலும் காவலர் சோதனையின் போது நீங்கள் அவரிடம் உங்கள் மிதிவண்டிதானா என உறுதி செய்ய மிதி வண்டியில் இருக்கும் இந்த அடையாள அட்டை மிகவும் அவசியமானது எனச் சொல்லி விட்டார்

ஜப்பானில் இருக்கும் எனது மிதி வண்டி. இதில் ஆறு கியர் வசதி உள்ளது (உட்படம்: மிதிவண்டியின் உரிமை  எண் (licence))
சரி, இதெல்லாம் ஒரு நடை முறைக்கு  சும்மா என நினைத்தால், என் கிராமத்தில் மாலை வேளைகளில் அநேக முறை காவலர்கள் மிதிவண்டிக்காரர்களை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருப்பதை பார்த்து அசந்து விட்டேன். அட நாமெல்லாம் மிதி வண்டிகளை தூக்கி போட்டு விட்டு இரு சக்கர வாகனங்களுக்கு மாறிய பின்பும், இவர்கள் இன்னும் கர்ம சிரத்தையாக மிதி வண்டிகளை பயன்படுத்துவது பயன்படுத்துவது குறித்து ஆச்சரியம் அடைந்தேன்


தோக்கியோ நகரில் மிதிவண்டி உரிமை எண்ணை பரிசோதிக்கும் காவலர்

மற்ற நாடுகளின் தலை நகரங்களை ஒப்பிடுகையில், ஜப்பானின் தோக்கியோ நகர தெருக்கள் மிக குறுகலானவை. மேலும் இங்கு கார் பார்க்கிங் கட்டணம் வீட்டு வாடகைக்கு நிகராக இருப்பதால் பெரும்பாலும் நகரின் பிரதான பகுதியில் இருப்பவர்கள் மிதிவண்டிகள் பயன்படுத்துவதையே விரும்புகிறார்கள்.


இட நெருக்கடி நிறைந்த தோக்கியோ நகரின் வீட்டு குடியிருப்புகளில் மிதிவண்டிகளை கூட நிறுத்த இடம் இல்லாததால் அடுக்கு நிறுத்த முறையை கையாளுகிறார்கள். எளிமையான பல் சக்கர முறையின் மூலம் மேலே உள்ள மிதி வண்டியினை கீழே இறக்கி கொள்கிறார்கள்.

இகேகாமி, தோக்கியோ நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் அடுக்கு நிறுத்த முறையில் நிறுத்தப்பட்டிருக்கும் மிதிவண்டிகள்
வேலை நிமித்தம் செல்பவர்கள், இரயில் நிலையங்களின் அருகில் உள்ள மிதி வண்டி நிறுத்தங்களில் பணம் கட்டி நிறுத்தி விட்டு செல்கிறார்கள். மொத்தமாக வருடத்திற்கு ஒரு தொகையினை செலுத்தி விட்டால் மிதி வண்டியில் அடையாள அட்டையினை ஒட்டி விடுகிறார்கள். ஆனால், சிலர் அனுமதிக்கப்படாத இடங்களில் சில மணி நேரங்கள் நிறுத்து விட்டு செல்கிறார்கள். சிலரோ கடைகளில் சாமான்கள் வாங்கும் பொருட்டு வணிக வளாகங்களில் எதிரில் அனுமதிக்கப்படாத இடங்களில் நிறுத்தி விட்டு செல்கிறார்கள்

இப்படிப்பட்ட வாகனங்களை கண்காணிக்கஓய்வு பெற்ற பெரியவர்கள் குழுவாக இயங்குகின்றனர். இவர்கள் முதலில் எச்சரிக்கை அட்டையினை ஒட்டி விட்டு செல்கிறார்கள்



அசகுசா (தோக்கியோ நகரம்) பகுதியில் சாலை ஓரம் அனுமதிக்கப்படாத இடத்தில் நிறுத்தப்பட்ட மிதிவண்டியில் எச்சரிக்கை அட்டையினை மாட்டும்  வாகன நிறுத்த கண்காணிப்பு குழுவினர்.

ஒரு மணி நேரம் கழித்தும் எச்சரிக்கையினை பொருட்படுத்தாத வாகனங்களை பெரிய வண்டிகளில் வந்து பறிமுதல் செய்து விடுகிறார்கள். அபாரதத்தின் தொகை புது மிதிவண்டியின் விலைக்கு இணையாக இருப்பதால் அதன் உரிமையாளர்கள் திருப்பி மீட்க முயற்சி செய்யாமல் போகட்டும் என விட்டு விடுகிறார்கள்.

இப்படி அப்புறப்படுத்தப்படும் மிதி வண்டிகள் சில நேரங்களில் மலையளவிற்கு குவிந்து விடுகின்றன. இவற்றை மறு சுழற்சி செய்வதும் அதிக செலவு பிடிக்கிறது.

இன்று காலை தோக்கியோ நகருக்குள் செல்லும் போது ஒரு பொது அறிவிப்பு  ஒன்றினை இரயில் நிலையத்தில் ஒட்டி இருந்தார்கள்

அதாவது அக்டோபர் மாதம் முழுவதும் அனுமதியற்ற முறையில், அவசர கால சேவை வாகனங்களுக்கு இடையூறாக நிறுத்தப்படும் மிதிவண்டிகள் அகற்றுவது பற்றி குறிப்பிடப் பட்டு இருந்தது

இந்த அறிவிப்பு தாளில் நான் படித்த ஒரு வாசகம் மிகவும் என்னை ஈர்த்தது. இவ்வாறு முறையற்ற வகையில் நிறுத்தப்படும் மிதிவண்டிகளை அகற்ற இந்த தேசத்தின் வரி செலுத்துவோரின் பணத்தையே பயன்படுத்த வேண்டி இருப்பதால் இது போன்ற செயலை நாம் வரும் காலத்தில் அனுமதிக்க கூடாது என தெளிவாக குறிப்பிட்டு இருந்தார்கள்

ஜப்பானை பொறுத்த வரையில் பணி புரியும் எல்லோரும் விதிமுறைக்கு உட்பட்டு வரி செலுத்தியே ஆக வேண்டும். இந்த பணத்தினை கொண்டே அரசு சேவை பணிகள், முதியவர்களுக்கான ஓய்வூதியம், மற்றும் பொதுதுறை அலுவலகர்களுக்கான ஊதியமும் இதில் இருந்தே வழங்கப்படுகிறது. ஆக வரிப்பணத்தினை தேவையற்ற முறையில் செலவழிப்பது என்பது ஜப்பானை பொறுத்த வரையில் மன்னிக்க முடியாத குற்றம்

நம் இந்தியாவில் சாலைகளை போடும் ஒப்பந்ததாரர்களும், அரசு அலுவலகர்களும் இப்படி மக்களின் வரிப்பணத்தினை மோசடி செய்யாது நேர்மையாக இருந்தால் நம் தேசம் எங்கோயோ சென்று இருக்கும்.




தோக்கியோ மாநகராட்சி பகுதியில் அனுமதியற்ற வகையில் சாலையில் இடைஞ்சலாக நிறுத்தப்படும் மிதிவண்டிகளை அகற்றவது குறித்து பொது மக்களுக்கான விழிப்புணர்வு அறிவிப்பு

ஜப்பானில் மிதி வண்டி ஓட்டுவதற்கென்று பிரத்யோக சாலை விதிமுறைகளும் உள்ளது

1. மிதி வண்டி ஓட்டும் பொழுது குடை பிடித்து செல்லக் கூடாது
2. கேபேசியில் பேசிக் கொண்டே மிதிவண்டி ஓட்டக்கூடாது
3. அதற்கென்று ஒதுக்கப்பட்ட சாலைகளில் (side walk), வழித்தடங்களில் மட்டுமே ஓட்ட வேண்டுன்.
4. அதிவிரைவு சாலைகளில் அனுமதி கிடையாது
5. பெரியவர்கள்குழந்தைகள் சாலைகளில் செல்லும் போது கவனமாக மெதுவாக கடக்க வேண்டும்.
6. தேவையற்ற முறையிலோஎரிச்சலூட்டும் விதத்திலோ மணியினை ஒலிக்க கூடாது
இரவில் ஓட்டும் போது முகப்பு விளக்கு அவசியம்
8. ஐபாட் போன்றவற்றில் பாட்டு கேட்டுக் கொண்டு மிதிவண்டி ஓட்டக்கூடாது
9. மது அருந்தி விட்டு ஓட்டக்கூடாது
10. இரண்டு நபர்கள் ஒரு மிதிவண்டியில் செல்லக்கூடாதுஅதே நேரம் ஆறு வயதுக்கு குறைவான குழந்தையினை பெரியவர் ஒருவர் தன்னோடு மிதிவண்டியில் அழைத்து செல்லலாம். ஆனால் ஆறு வயதுக்கு குறைவான குழந்தைகளை அவர்களுக்கென்று பொருத்தப்பட்ட பிரத்யோக இருக்கை அமைத்து அழைத்து செல்லலாம்அவர்களுக்கு தலைக் கவசம் அவசியம்


ஒரு சில விதிகள் நீங்கலாக விபத்து ஏற்படுத்தகூடிய செயல்களுக்கு பொதுவான அபராதத் தொகை 5000,00 யென்னில் இருந்து 10000,00 யென் வரை வரும் (100 யென் ஏறத்தாழ 40 ரூபாய்).


மிதிவண்டி ஓட்டுபவர்களுக்கு தேவைப்படும் ஜப்பானிய வார்த்தைகளை தெரிந்து கொள்ள இந்த சுட்டியினை காணவும்
http://www.japancycling.org/v2/info/lang/japaneses.shtml


ஜப்பானில் எல்லா இரயில் நிலையங்களில் அருகிலும்  மிதிவண்டிகள் நிறுத்த  ஏதுவாக மாதாந்திர கட்டணங்களின் அடிப்படையில் இயங்கும் மிதிவண்டி நிறுத்தகங்களோஅல்லது மணி நேர கணக்கிற்கு பணம் செலுத்தும் வகையில் தானியங்கி மிதிவண்டி நிறுத்தங்களோ உண்டு.

முதல் வகையில் மாதமோ அல்லது வருடமோ ஒரு தொகையினை செலுத்தி விட்டால் உங்கள் மிதிவண்டியில் அடையாள ஒட்டு அட்டையினை பொறுத்தி விடுவார்கள்இது எளிமையானதுதினமும் மெனக் கெட்டு பணம் செலுத்த தேவையில்லை.

மிதிவண்டி நிறுத்தத்திற்கான வருட சந்தா செலுத்தியதற்கான அடையாள அட்டை.

மிதிவண்டி நிறுத்தம். உங்கா  (Unga) இரயில் நிலையம் அருகில்
காசு போடும் தானியங்கி இயந்திரம் மூலம் இயங்கும் மிதிவண்டி நிறுத்தகம்

இரண்டாவது வகை நிறுத்தங்களில் மெட்ரோ இரயில்களுக்கு பயன்படுத்தப்படும்ரேடியோ அதிர்வெண்கள் அடிப்படையில் இயங்கும் மின்காந்த அட்டையில் இருந்தே செலுத்திக் கொள்ளலாம் அல்லது சில்லைறை காசுகளை இயந்திரத்தில் போட்டும் பயன்படுத்தலாம்.

தற்போது பூமிக்கு அடியில் நிலவறையில் (underground sustainable parking) மிதிவண்டிகளை நிறுத்திக் கொள்ளும் வசதி தோக்கியோ நகரில் பல இடங்களில் காண முடிகிறதுதானியங்கி வசதி உள்ள இந்த நிறுத்தத்தில் மிதிவண்டியினை தரை தளத்தில் விட்டு விட்டால் தானாகவே அதனை கீழே உள்ள அடுக்கு அறைகளுக்கு எடுத்து சென்று விடும்மீண்டும் மிதிவண்டியினை எடுக்க உங்கள் கடவுச் சொல்லை அங்குள்ள மின் திரையில் பதிந்து விட்டால் மிதிவண்டியினை வெளியே எடுத்து தந்து விடும்



Photocredit: http://www.dailymail.co.uk/



தற்போது பாட்டரி பொருத்திய மிதிவண்டிகள் நிறைய கிடைக்கின்றன. இவை குழந்தைகளை வைத்து கொண்டு சிரமப் பட்டு மிதிவண்டி அழுத்தி செல்லும் பெண்களுக்கும், முதியவர்களுக்கும் உதவியாகஇருக்கிறது.


 அன்றாடப் பணிகளுக்கு மட்டும் ஜப்பானியர்கள் மிதிவண்டிகளை பயன்படுத்துவதில்லை. வார இறுதியில் ஓய்வாகநகருக்கு வெளியே கால்வாய் ஓரங்களில், புற நகர் வீதிகளில்  பல மைல்களுக்கு மிதிவண்டியில் சுற்றுவதை ஒரு பொழுது போக்காக வைத்திருக்கிறார்கள். இதற்கான பிரத்யோக மிதிவண்டிகளும் அதற்கான ஆடைகளுக்கும் ஜப்பானியர்கள் பெரும் தொகையினை செலவிடுகின்றனர். இது சார்ந்து நிறைய மிதி வண்டி கிளப்புகளும் உண்டு.


சொன்னால் நம்ப மாட்டீர்கள்ஜப்பானை மிதிவண்டியிலேயே சுற்றிவரலாம்அந்த அளவிற்கு ஏதுவாக சாலை உட்கட்டமைப்பு வசதியும், இரயில்களில் மிதிவண்டிகளை கையோடு எடுத்து செல்லும் வசதியும் உள்ளது.  

ஒவ்வொரு மாகாணமும் (prefecture) மிதிவண்டியில் சுற்றி பார்ப்பதற்கு தேவையான வழித்தடங்களையும் வழியில் ஓய்வெடுப்பதற்கு தேவையான தகவல்களை தரும் கையேடுகள் இணையத்திலும்இரயில் நிலையங்களில் வாசலில் இலவசமாகவும் கிடைக்கின்றன.

மிதிவண்டியில் ஜப்பானை சுற்றிப் பார்க்க ஆசைப்படுபவர்களுக்கு கீழ்கண்ட சுட்டி பயன்படும் என்று எண்ணுகிறேன்.




ஜப்பானில் ஒரு சில நகரங்களில் நிறைய பார்க்க வேண்டிய இடங்கள் இருக்கும் அப்படிப் பட்ட நகரங்களில் வாடகை மிதிவண்டிகளை எடுத்துக் கொண்டு வலம் வரலாம்நாள் வாடகை அதிகபட்சம் 1200 யென் மட்டுமேவாடகை சைக்கிள் எங்கே தருவார்கள் என கவலை வேண்டாம். எல்லா சுற்றுலா தலங்களிலும் இரயில் நிலையத்தின் எதிரில்  தகவல் மையங்கள் உள்ளதுஅங்கு சென்று நகரின் வரைபடத்தினை இலவசமாக வாங்கி கொள்ளலாம்அதில் மிதி வண்டி குறியிட்ட இடங்களில் மிதிவண்டிகள் வாடகைக்கு கிடைக்கும்.  அங்குள்ள‌ இடத்தில் சென்று காசை அங்குள்ள இயந்திரங்களில் போட்டு விட்டு மிதிவண்டியினை எடுத்து கொள்ளலாம்.

மிதிவண்டியின் டயருக்கு தேவையான காற்று அழுத்த கருவிகள் கையடக்க அளவில், மிகக் குறைந்த  விலையில் ஜப்பானில் கிடைக்கின்றன. தென் கொரியாவின் சியோலில்  நகரின் சப்வே இரயில் நிலையங்களில் உள்ள மிதிவண்டி நிறுத்தங்களில் இலவசமாக காற்று பிடித்து கொள்ளும் வசதி உள்ளது. இங்கும் ஜப்பானில் சில இடங்களில் உள்ளது என நண்பர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் நான் இதுவரை பார்த்ததில்லை. 

 உண்மையில் இந்தியா போன்ற தேசங்களில் உள்ள பெருநகரங்களில் மிதிவண்டியின் பயன்பாடுகளை அதிகரிக்கலாம். அதற்கு தேவையான உட்கட்டமைப்பினை செய்து மக்களிடையே விழிப்புணர்ச்சியினை அதிகரிக்கலாம். இதன் மூலம் ஆண்டு தோறும் வாகனங்களில் இருந்து அதிகரித்து வரும் கார்பன் நச்சு புகை வெளியேற்றத்தினை தடுக்கலாம். வளரும் நாடுகள் ஜப்பானை பின்பற்றி மிதிவண்டியின் உபயோகத்தினை தங்கள் நாட்டு மக்களுக்கு சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்
பெருநகரங்களில் சாலையின் இருமங்கிலும் சிறிய வழித்தடங்களை அமைக்கலாம். குறைந்த பட்சம் வீட்டில் இருந்து சப்வே அல்லது அருகில் உள்ள இரயில் நிலையத்தில் இருந்து அலுவலகம் செல்ல பேருந்திற்கு பதில் மிதிவண்டிகளை நாம் பயன்படுத்தலாம்

சமீபத்தில் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் வாகன மாசுக் கட்டுபாட்டினை பற்றிய விழிப்புணர்ச்சிக்கு கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி ஒரு நாள் வாகனங்கள் பயன்படுத்தாமல் (Une Journée Sans Voiture -A Day Without a Car) மிதிவண்டியின் மூலம் அனைவரும் அலுவலகங்களுக்கு சென்றுள்ளார்கள். இதன் மூலம் மக்களிடையே 
மிகப் பெரிய விழிப்புணர்ச்சியினை  ஏற்படுத்தி உள்ளார்கள். 

பாரீஸ் நகரில் மகிழ்வுந்து இல்லா நாள் அன்று மிதிவண்டியில் மட்டும் சாலையில் செல்லும் காட்சி. செப்டம்பர் 27 ஆம் தேதி, பாரீஸ் நகர் மன்ற சாலை.Photocredit. forbes.com

தற்போது மிதிவண்டியில் சென்றால் தரக்குறைவு என்று என்னும் எண்ணம் நம்மிடையே வளர்ந்து வருகிறதுஇது மிகவும் தவறு. ஜப்பானில் ஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரி மிக எளிதாக மிதிவண்டியில் அலுவலகம் வருவதை காண முடியும். எங்கள் பல்கலைக் கழகத்தில் பல பேராசிரியர்கள் மிதிவண்டியில்தான் தினமும் வருகின்றனர்

மேலும் மிதிவண்டியில் வருபவர்களுக்கு ஜப்பானிய அரசு சிறு தொகையினை ஊக்கமாக மாதச் சம்பளத்தோடு சேர்த்து தருகிறதுமிதிவண்டியில் வருவது ஒரு உடற்பயிற்சியே, இதனால் 
 உடலின் தேவையற்ற கலோரி எரிக்கப்பட்டு உடலுக்கு ஆரோக்கியத்தினையும் கூட்டுகிறது

நம் ஊரில் மிதிவண்டி பற்றிய விழிப்புணர்ச்சியினை நம் இளைய தலைமுறையினர் உணரவேண்டும். நாட்டின் மாசு சீர்கேட்டினை ஒழிக்க, முடிந்த வகையில் மிதிவண்டியினை  அன்றாட வாழ்வில் பயன்படுத்துவோம். அருகில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு, ஏரிகள், மற்றும் நல்ல இயற்கை காட்சி நிறைந்த தளங்களுக்கு மிதிவண்டியில் குழுவாக செல்லும் முறையினை இனியாவது முன்னெடுக்கலாம்.

(குறிப்பு: ஜப்பானில் நடுநிலைப்பள்ளிகளுக்கு பின்னர் மாணவர்கள் பெற்றோரால் மகிழ்வுந்தில் கொண்டு வந்து விடப்படுவது தடை செய்யப்பட்டுள்ளதுபள்ளியின் அருகே உள்ள மாணவர்கள் மிதிவண்டியில் வர பழக்கப்படுத்தபடுகிறார்கள். குறிப்பிட்ட வயதிற்கு பிறகு எல்லா மாணவர்களும் மிதிவண்டி கட்டாயம் ஓட்ட தெரிந்திருக்க அறிவுத்தப்படுகிறார்கள் ஜப்பான் நாட்டின் பின் வரும் தலைமுறையினர் மிதிவண்டி பயன்படுத்தவதற்கு இதுவும் ஒரு உத்தி எனலாம்)

No comments:

Post a Comment