Monday 26 October 2015

அவந்தியும் ஜப்பானிய பள்ளியும்.. (Avanthi's experience in Japanese Nursery School)


ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் ஓடி விட்டது, ஆனாலும் முதல் நாள் அவந்தி ஜப்பானில் உள்ள சிறுமியர் பள்ளிக்கு  சென்றது மறக்க முடியாத நாளாகத்தான் எங்களுக்கு இருந்தது.

இந்தியாவில் இருந்து அவந்தி ஜப்பானுக்கு  வந்தபோது அவளுக்கு 1 வயது 5 மாதம், மழலை மொழியில் குறியீடுகளோடு பேசிக் கொண்டிருந்தாள்.

எனது மனைவியும் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து கொண்டிருந்ததால், பகல் நேரத்தில் அவந்தியை கவனித்து கொள்ள முடியாது. ஆகையால் வேறு வழியின்றி சிறுமியர் பள்ளிக்கு அனுப்பி வைத்தோம்.

ஒரே ஆறுதல் ஜப்பானில் ஆறு வயது வரை பள்ளி பாடத்திட்டங்கள் கிடையாது. விளையாட்டு, வண்ணம் தீட்டுதல், ஸ்டிக்கர் ஒட்டுதல், பொம்மை செய்தல் என கற்பனைத் திறனை வளர்க்கும் செயல் மட்டுமே கற்பிக்கிறார்கள். ஆறு வயதில் இருந்து பத்து வயது வரை தேர்வுகள் கிடையாது (primary school). முழுக்க முழுக்க சமூக கல்வியே. எப்படி சிறந்த குடி மகனாக நடந்து கொள்வது என்பதை மட்டுமே போதிக்கிறார்கள். காவல் துறையினர் அவந்தியின் பள்ளிக்கே நேரில் வந்து ஐந்து வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு சாலையில் எவ்வாறு விதி முறைகளை பின்பற்றி நடக்க வேண்டும். சிக்னல்களில் உள்ள பாதாசாரிகளுக்கான பொத்தானை எப்படி உபயோகிக்க வேண்டும். அவசர காலங்களில் காவல்துறையினரை எப்படி அழைக்க வேண்டும் என அவர்களே வகுப்பு எடுக்கின்றனர். இதுவே இக்குழந்தைகள் பெரியவர்கள் ஆகும் போது சாலைகளில் விதிமுறைகளை பின்பற்றி நடக்க உதவியாக உள்ளது.

எவ்வளவு நல்ல விசயங்கள் இருந்தாலும், ஒரு பெற்றோராக‌ முதலில் நாங்கள் பயந்தது, மொழி தெரியாத சூழ லில்  தூக்கம் வருவதையும், பால் வேண்டுமென்றால் எப்படி ஆசிரியரிடம் எப்படி கேட்பாள்  என்று தவித்துக் கொண்டு இருந்தோம். ஆச்சரியம், மூன்றே மாதங்களில் பள்ளியின் அட்டவணை செயல்களோடு ரோபோ போல பழக்கப்பட்டு இருந்தாள்.

காலையில் பள்ளியில் விடச் செல்லும் போது சிணுங்குவாள், அழுவாள், பள்ளிக்கு உள்ளே சென்றதும் அவளது ஆசிரியைகளில் யாராவது ஒருவர் அவளை தூக்கி வைத்து கொண்டால் சிறிது நேரத்தில் சமாதானம் ஆகி விடுவாள். இங்குள்ளவர்கள் நம் ஊரில் உள்ள போது குழந்தைகளை இடுப்பில் தூக்கி வைப்பதில்லை, பெரிய துணி கொண்டு தூளி செய்து முதுகோடு கட்டிக் கொள்கிறார்கள். ஒரு விதத்தில் இது எளிது, நெடுநேரம் குழந்தைகளை சுமந்தாலும் இடுப்பில் வைத்திருப்பது போல் கை வலிக்காது.

வருடம் ஒரு முறை பெரிய அளவில் விளையாட்டு போட்டி வைத்து எல்லா குழந்தைகளையும் கட்டாயம் பங்கேற்க வைக்கிறார்கள் (இது பற்றி தனி பதிவு நிச்சயம் எழுதுகிறேன்). நம் ஊரில் உள்ளது போல விளையாட்டு போட்டிகளுக்கு பெற்றோர்கள் கடைக்கு சென்று பெரும் செலவு செய்து அலங்கார பொருட்கள், துணிகள் வாங்குவது முற்றிலும் கிடையாது.

தூக்கி எறியப்படும் பொருட்களான நூடுல்ஸ் பெட்டி, காலியான பால் பெட்டியின் காகித உறைகள் என வீணான பொருட்களில் பொம்மைகளும், பரிசு பொருட்கள், பதக்கங்கள், தொப்பிகள், அலங்காரப் பொருட்களை குழந்தைகளை கொண்டே ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே செய்யத் துவங்கி விடுகிறார்கள்.

நம்பமாட்டீர்கள் விளையாட்டு போட்டியன்று குழந்தைகள்  வைத்திருக்கும் கைவினை பொருட்களை உற்றுப் பார்த்தால் மட்டுமே அவையெல்லாம் பயன்படுத்திய பொருட்களில் இருந்து செய்தவை என கண்டுபிடிக்க முடியும். இதன் மூலம் குழந்தைகளின் கற்பனை சக்தி திறன் அதிகரிப்பதோடு, குப்பைகளை எவ்வாறு பயனுள்ள பொருளாக மறு சுழற்சி செய்யலாம் என கற்றுக் கொள்கிறார்கள்.

குழந்தைகளை காலையில் விட்டவுடன் அங்கிருக்கும் சிறிய மேசை நாற்காலிகளில் குழந்தைகள் உட்கார பழக்கப்படுத்தப்பட்டு, கோப்பைகளில் பால் அருந்தவும், தீனிகள் தின்னவும் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.

சாப்பிட்டு முடிந்தவுடன், வரிசையாக சென்று அங்குள்ள குழாயில் கைகழுவி விட்டு கை துடைக்கும் காகிதங்களில் (Tissue) கைகளில் உள்ள ஈரத்தினை துடைத்து கொள்கிறார்கள். மறக்காமல் குப்பைகளை அந்த தொட்டிகளில் போடக் கற்றுக் கொள்கிறார்கள். இதற்காகவே குப்பை போடும் விளையாட்டினை கற்றுக் கொடுக்கிறார்கள்.

முதலில் எல்லா குழந்தைகளுக்கும் பழைய செய்தி தாள்களை கொடுத்து யார் அதிகம் கிழித்து குப்பைகள் போடுகிறார்கள் என போட்டி நடக்கும். பின்னர் அத்தனை குப்பைகளையும் சரியாக யார் குப்பை தொட்டியில் போடுகிறார்கள் என அடுத்த போட்டி, இப்படி ஆறு மாதத்தில் தொடர்ச்சியான பயிற்சியில் சுத்தமான சூழலை வைத்திருக்க பழக்கப்படுத்தபடுகிறார்கள்.

அவந்தி முதலில் நோதா நகரில் உள்ள நாகானே (Nagane Hoikwan School, Nodashi) சிறுமியர் பள்ளியில் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக போய் வந்தாள். தற்போது கடந்த ஆறு மாதமாக எங்கள் வீட்டில் இருந்து ஒரு கிமீ தொலைவில் உள்ள உமேசதோ (Umesado Hoikwon School) சிறுமியர் பள்ளிக்கு சென்றாள். 

பழைய பள்ளியினை ஒப்பிடும் போது, இப்பள்ளி நவீன வசதிகளோடு கட்டப்பட்ட புதிய பள்ளி. ஆகையால் அதன் உட்கட்டமைப்பே நம்மை வசீகரீக்கும். 




Umesato Nursary School, Nodashi, Japan

Umesato Nursary School, Nodashi, Japan


பள்ளியின் உள் வாசலை அடைந்தவுடன் அங்கிருக்கும் வருகை அட்டையினை தானியங்கி இயந்திரத்தில் செலுத்தி பதிவு செய்து வைத்து விட வேண்டும். 

காலணிகளை மாணவர்களின் பெயர் எழுதியுள்ள‌ பெட்டியில் வெளியில் வைத்து விட வேண்டும். இதே பழக்கம் ஜப்பானிய உயர் நிலை பள்ளிகள் வரை தொடரும். அங்கு, பள்ளிக்குள் பயன்படுத்த பிரத்யோக காலணிகளை தனியாக அணிந்து கொள்ளலாம்.

அவந்தி அவளே அவளது காலணிகளை கழட்டி அவளுடைய பெட்டியில் சரியாக வைத்திருக்க பழக்கபட்டிருந்தாள். பகலில் தினமும் இரண்டு மணி நேரம்  குழந்தைகள் தூங்க வைக்கப்படுகிறார்கள். குழந்தைகளுக்கு தேவையான உணவினை பள்ளியிலேயே தயாரித்து வைத்து விடுகிறார்கள். மிகச் சரியாக தராசு கொண்டு அளக்கப்பட்டு சரிவிகித உணவினை சமமாகவே எல்லா குழந்தைக்கும் கொடுக்கிறார்கள். சிறியது, பெரியது, பிடித்த குழந்தைகள் என பேதமே கிடையாது. எல்லோரும் சமமாகவே நடத்தப்படுகின்றனர். முக்கியமாக ஆசிரியரும் இதே உணவினை குழந்தைகளோடு அமர்ந்து உண்ண வேண்டும். 

நாம் "சாப்பாடு" என்று உணவினை பொதுவாக அழைப்பது போல், ஜப்பானியர்க‌ள் அவர்கள்  உண்ணும் உணவினை "கோகன்" (gohan) என்றழைக்கிறார்கள்.
சமைத்த அரிசி சாதம் உட்பட பெரும்பாலான மற்ற உணவும் இதே பெயரிலேயே அழைக்கப்படுகிறது.  பொதுவாக கோகனில் வேக வைத்த சோறு, சூப் (மீசோ), ஒரு இறைச்சி துண்டு (மீன், கோழி, பன்றி அல்லது மாட்டு இறைச்சி இவற்றில் ஏதாவது ஒன்று), இனிப்பு ஆகியவை இருக்கும். சாப்பாட்டிற்கு முன் அனைவரும் உணவு தயாரித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு இதாதாகிமசு" (itadakimasu) என்று ஒருமித்த குரலில் சொல்லிய பிறகே உண்ண வேண்டும். இதை வீடு, வெளி கடைகள் என  எல்லா இடங்களிலும் இந்த  வழக்கத்தினை கடைபிடிக்கிறார்கள். இதன் நேரிடையான பொருள் நான் இந்த உணவினை பெற்றுக் கொள்கிறேன் என்பதே. ஆனால் நன்றி நவிலலே இதன் முக்கியப் பொருள்.  அனைவரும் உண்டு முடித்த பின் "கொசிசோ சாமா தெசிதா" (gochiso sama deshita) என நன்றியுடன் முடிக்க வேண்டும். இதன் நேரடி பொருள், இந்த உணவு ஒரு விருந்தினை போல் இருந்தது என அவர்களை பாராட்டுவதே.



கடைசி நாளின்போது அவந்திக்கு விடைகொடுக்கும் பொருட்டு பள்ளியில் வைக்கப்பட்டிருந்த பிரிவு வாழ்த்து செய்தி


அவந்தி தன் வகுப்பு சிறுமியர்களோடு விளையாடிய போது எடுத்த படம்

அவந்தி தன் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் சிறுமியர்களோடு  எடுத்த படம்

அவந்தி தன் வகுப்பு சிறுமியர்களோடு விளையாடிய போது எடுத்த படம்
கடந்த வாரம், வியாழன் அன்று அவந்தி இந்தியா செல்ல இருக்கிறாள். இனி அடுத்த வாரம் முதல் பள்ளிக்கு அவந்தி வரமாட்டாள் என என் மனைவி தயங்கி தயங்கி சொன்னவுடன் அவர்களது ஆசிரியர்களின் முகம் வாடி விட்டது. 

அடுத்த நாள் அவந்தியின் பள்ளிக்குள் சென்ற போது வரவேற்பரையில் உள்ள கரும்பலகையில் அவந்தியின் கார்ட்டூன் படம் வரையப்பட்டு, அவந்தி நாளையில் இருந்து பள்ளிக்கு வரமாட்டார், ஆகையால் அவருக்கு மகிழ்ச்சியாக விடை கொடுக்க வேண்டும் என்று அதில் வாழ்த்தும் எழுதி இருந்தார்கள். 


அவந்தியின் கடைசி நாளில் அவள் விளையாடிய போது புகைப்படங்கள் எடுத்து, வாழ்த்து அட்டை ஒன்றினை தயாரித்திருந்தார்கள்.  அவள் இந்த ஆறு மாத காலத்தில்ச் செய்த பொம்மைகள், விளையாட்டு பொருட்கள் உள்ளிட்ட‌ வண்ணம் தீட்டிய அட்டைகளை ஒரு பையில் போட்டு பரிசாக தந்தார்கள். பின்னாளில் அவந்திக்கு இது பெரும் நினைவு பரிசாக இருக்கும்.  


அவந்தியின் ஆசிரியர்களுக்கு ஒரு துளி கூட ஆங்கிலம் தெரியாது. ஆனாலும் அவளுடைய குறிப்பேட்டில் தினமும் எழுத வேண்டி முடிந்த வரை மொழி பெயர்ப்பு சாதன (Translator) உதவியுடன் மொழி பெயர்த்து ஆங்கிலத்தில் குறிப்பு எழுதி வைப்பார்கள். அந்த குறிப்புகளில் இலக்கண பிழைகளை விடவும், அவர்களின் அன்பே மேலோங்கி நிற்கும். 

இந்த பள்ளியின் ஆசிரியர்களுக்கு நாங்கள் நிறைய நன்றிக் கடன் பட்டிருகின்றோம். திருவாசகத்தில் மாணிக்க வாசகர் சொன்ன து போல்,  "பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து" என்ற உரைக்கு நிகராக தாயினும் அதிகமாய் கவனித்து கொண்டார்கள். 



私たちは、幼稚園の先生に感謝 良い習慣や態度を教えるために. どうもありがとうございました

2 comments:

  1. வாசிக்க வாசிக்க வியப்பாக உள்ளது.

    ReplyDelete
  2. சகோ நீங்கள் எழுதிய ஜப்பான் மழலையர் பள்ளியின் 98 சதவிகித ஒற்றுமை நோர்வே பள்ளிகளுக்கும் உண்டு, ஒரு மனிதனின் வாழ்வில் தொடக்கநிலை ஒழுக்க பயிற்சி மழலையர் பள்ளியில் தான் தொடங்குகிறது என்பது என் புரிதால். நார்வேயில் உள்ள மேலதிக அம்சங்களாக நான் பார்த்தது, மொழிதெரியாத புதிய குழந்தைகளுக்கு முதல் 6 மாதம் குழந்தையின் தாய் மொழி தெரிந்த ஒரு ஆசிரியர் வாரத்தில் சில மணிநேரம் சென்று அத்தியாவசிய தொடர்பாடல்களை நார்வே மொழியில் பயிற்றுவிப்பார். மாதம் தொடங்கும் முன் அந்த மாதத்தில் அவர்கள் செய்யபோகும் விடயங்களை நம் மின்னஞ்சலுக்கு அனுப்பிவைப்பார்கள். நார்வே தேசிய நாளில் அனைத்து மழலையர் முதல் மேல்நிலை பள்ளிகள் வரை உள்ள குழந்தைகள் எங்கள் ஊரின் மத்தியில் தேசிய உடை அணிந்து பாடல்கள் பாடி அணிவகுத்து அவர்கள் பள்ளியின் பதாகை(பள்ளியின் இலட்சினை, கொடி, பெயர்) ஏந்தி செல்வர்கள். கடற்கரை, குளங்கள்(மீன், தவளை வளரும் பருவம் பற்றி பயிற்சி), பண்ணைகள், அருங்காட்சியகங்கள், மலைகள், காடுகள் போன்ற இடங்களுக்கு அழைத்து செல்லுதல், தனியாக ஒருசில தலைப்புகளில் பேச வைப்பது, வருடம் இரு முறை பெற்றோர் பங்குபெறும் BBQ நிகழ்வுகளை செய்து மற்ற பெற்றோர்களுடன் இணைப்பை ஏற்படுத்துவார்கள். கற்பனைவளம், தனித்திறன் வளர்த்தல், குழுவாக பணியாற்றும் பயிற்சிகள் போன்றவை ஒரே மாதிரியாக அனைத்து மழலையர் பள்ளியிலும் பின்பற்றுவது இவர்கள் நாடு முழுவதும் அனைவரும் ஒரே சீராக இருப்பதை கண்கூட பார்கிறேன்.... அவந்தியும் இவற்றை போலவே ஆரம்ப கல்வி பெற்றதால் வாழ்வில் சிறப்பான உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்....

    ReplyDelete