Thursday 15 October 2015

எது மக்களின் பத்திரிக்கை?

கடந்த 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட மாபெரும் கிழக்கு ஜப்பான் நிலநடுக்கம் (Great Japan Earthquake) மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி பேரலைகளால் பெரும் அழிவினை சந்தித்த நகரம் இசினோகாமி (Ishinokami). இது மியாகி (Miyaki) மகாணத்தில் உள்ள கடற்கரையோர நகரம்.

ஜப்பானிய அரசின் புள்ளி விபரப்படி இந்தசுனாமி பேரலையால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,580. மேலும் 2013 ஆம் ஆண்டு ஜப்பானின் தேசிய காவல் நிறுவனத்தின் கணக்கு படி மியாகி உள்ளிட்ட இவாதே, புகுசிமா மாகாணங்களில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 2698.

ஒரே நாளில் ஏற்பட்ட சுனாமியில் இசினோகாமி நகத்தில் ஏறத்தாழ ஒன்றரை லட்சம் மக்கள் வீட்டினை இழந்து, உறவுகளை இழந்து நடுத் தெருவில் நின்றனர். கடலில் அடித்து செல்லப்பட்ட உறவுகளை தேடி ஒருபுறமும், தங்கள் வாழ்வாதாரங்களை  இழந்து அடுத்த வேளை குடிநீருக்கும், உணவையும் தேடி திக்கற்றவர்களாக  அலைந்தனர்.

சமீபத்தில் இந்த நகரத்திற்கு முழுமதி அறக்கட்டளை நண்பர்களுடன் செல்லும் வாய்ப்பு கிடைத்த போது அந்நகரெங்கும் குவியல் குவியலாக காணப்பட்ட கல்லறைகளை கண்டபோது நான்கு வருடத்திற்கு முன்பு நடந்த சம்பவங்களை கற்பனை  செய்து பார்க்க முடிந்தது

சுனாமியின் போது இறந்தவர்களுக்காக எழுப்பபட்ட கல்லறைகள். இசினொகாமி நகரம்

இசினொகமி நகரின் கடற்கரையோரத்தில் சுனாமியில் உயிர் இழந்தவர்களுக்காக வைக்கப்பட்டுள்ள நினைவேந்தல் பிராத்தனை கூடம்.

இசினொகமி நகரின் கடற்கரையோரத்தில் உள்ள துவக்கப் பள்ளி, சுனாமியாலும், தீ விபத்தாலும் பாதிக்கப்பட்டபோது எடுத்த படம்.

சரி விசயத்திற்கு வருகிறேன். இந்த இசினொகாமி நகரத்தில் அமைந்துள்ள "இசினொகாமி கிபி சிம்புன்" ( Ishinomaki Hibi Shimbun)  என்ற மாலை நேர தினசரி செய்திதாள் 1901 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்த தினசரியானது மியாகி மாகாணத்தில் உள்ள இசினொகாமி, கிகாசி மட்சுசிமா, மற்றும் ஒனகவாசொ நகரங்களில் விநியோகிக்கப்படுகிறது.

2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் தேதி சுனாமி பேரலையானது இசினொகாமி நகரத்திற்குள் 9 மீட்டர் அளவிற்கு சூழ்ந்தது. இந்த சூழலில் தினசரி அலுவலகத்தின் முதல் தளம் முற்றிலும் நீரால் சூழ்ந்து, இரண்டாவது தளத்தின் பாதி வரை கடல் நீர் அடித்து சென்றது. நகரமே மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி கிடந்தது. நல்லவேளையாக இந்த சுனாமி அழிவில் பத்திரிக்கையில் வேலை பார்த்த அலுவலர்கள் அருகில் உள்ள மலைகளில் ஏறி உயிர் தப்பினர்.

ஒரு நகரமே மின்சாரம் இல்லாமல், வெளி உலக தகவல் தொடர்பு எல்லாமே துண்டிக்கப்பட்டு ஏறத்தாழ சுடுகாடாக இருக்கும் போது இத்தினசரியின் தலைவரான திரு கொய்ச்சி ஒமி ( Koichi Ohmi) ஒரு முடிவு செய்தார். நாளைய வாழ்வு என்னவாகும் எனத் தெரியாத நம் மக்களுக்கு தொடர்ந்து நம்பிக்கை ஊட்ட வேண்டும் என உறுதி கொண்டார் .  

தற்காலிக முகாம்களில் தங்கியிருக்கும் லட்சக் கணக்கான மக்களுக்கு அரசின் புணரமைப்பு மட்டும் மீள் கட்டுமான செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும். எப்படி முடியும்? என அவரது சகாக்கள் கேட்டபோதுஇரண்டாம் உலகப் போர் சமயத்தில் செய்திதாள்கள் தடைசெய்யப்பட்ட நேரத்தில் இப்பத்திரிக்கை எவ்வாறு கையெழுத்து செய்திகளாக மக்களிடம் கொண்டு சேர்த்தது என்ற இத்தினசரியின் பழைய‌ வரலாற்றினை நினைவூட்டி அவர்களுக்கு தெம்பூட்டினார்.

அவர்களிடம் இருந்த சுருள் தாள் மற்றும் மை பேனாக்களைக் கொண்டு சுவரொட்டி வடிவில் செய்திகளை ஒரு பக்கத்தில் எழுதினர். இதன் தலைமை ஆசிரியர் கிரொயுகி தகெயுச்சி-‍சன்  (Hiroyuki Takeuchi) மற்றும் அவரது சக அலுவலர்களும் மார்ச் 12 ஆம் தேதி ஆறு  கையெழுத்து சுவரொட்டிகளாகசெய்திதாளை தயாரித்தனர்முதல் தலைப்பு செய்தியே இதுதான்: ஜப்பானின் மிகப்பெரிய நிலநடுக்கமும், சுனாமியும்.

பின்னர் மார்ச் 12 லிருந்து 17 ஆம் தேதி வரை ஆறு நாட்களுக்கு மின்சாரமே இல்லாத சூழலில் 42 சுவரொட்டி செய்தி தினசரிகளை தயார் செய்து நகரின் முகாமெங்கும் ஒட்டி மக்களிடையே நம்பிக்கையினை ஊட்டினர். வெளி உலக தொடர்பே இல்லாத சூழலில் மக்களுக்கு கிடைத்த ஒரே செய்தி இவர்களுடையதுதான். பின்னர் மார்ச் 18 ஆம் தேதி மின்சாரம் கிடைத்தவுடன் நகலெடுத்து செய்தி தினசரியினை மக்களிடம் கொண்டு சேர்த்தனர். ஒரு வழியாக மார்ச் 19 ஆம் தேதி அச்சு இயந்திரம் சரி செய்யப்பட்டு வழக்கம் போல் செய்திகளை மக்களிடம் கொண்டு சென்றனர்.

இவர்களின் தன்னிகரற்ற சேவையினை பாராட்டும் விதம் 2011 ஆம் ஆண்டு செம்டபர் மாதம் சர்வதேச செய்தியாளர் கழகம் இவர்களை அழைத்து கெளரவித்தது. மேலும் அமெரிக்காவில் வாசிங்டன் நகரில் உள்ள செய்தி அருங்காட்சியகத்தில் (Nueseum) இவர்கள் வெளியிட்ட 42 கையெழுத்து தினசரிகளில் ஒன்றை மக்களின் பார்வைக்கு வைத்துள்ளது.


அமெரிக்காவின் வாசிங்டன் நகரத்தில் உள்ள நியூசியத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள  தினசரியின் கையெழுத்து சுவரொட்டி.


இது பற்றி இச்செய்தி தின‌சரியின்   தலைவர் திரு கொய்ச்சி ஒமி அவர்களிடம் கேட்டபோது, அழிவின் சோகத்தில் எங்கள் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதை காட்டிலும் எங்களுக்கு வேறு பணி இருக்க முடியாது. ஏனெனில் எங்களுக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளிகளே எங்கள் மக்கள்தான். எந்த சூழலிலும் தொய்வின்றி அவர்களுக்கு செய்தியினை எடுத்து செல்லுதல்  எங்கள் கடமை என்று கூறியுள்ளார். ஜப்பானியர்களின் கடினமான சூழலிலும் கடமை அர்ப்பணிப்புடன் வேலை பார்க்கும் குணத்திற்கு இதுவும் ஒரு உதாரணம்.

சுனாமியின் போது வெளியிடப்பட்ட கையெழுத்து சுவரொட்டி செய்திதாளை விவரிக்கும் அதன் தலைமை ஆசிரியர் கிரொயுகி தகெயுச்சி-‍சன் 


சுனாமியின் போது வெளியிடப்பட்ட கையெழுத்து சுவரொட்டி செய்திதாளை விவரிக்கும் அதன் தலைமை ஆசிரியர் கிரொயுகி தகெயுச்சி-‍சன் 

உண்மையில் இது போன்ற பல ஊடக செய்தியாளர்கள் நம் தமிழகத்தில் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி பணி புரிகின்றனர். ஆனால் அவர்களை வழி நடத்த வேண்டிய ஊடக முதலாளிகளின் நிலையினை நான் சொல்லி தெரிவதில்லை.


நடுநிலைமையோடு, பேசாப் பொருளையும், மக்களுக்கு தேவையான, அவர்களின் பிரச்சினைகளை சமூகத்திற்கு துணிச்சலுடன் முன்னெடுக்கிற பத்திரிக்கையே தலைமுறைகளை கடந்து "இசினொகாமி கிபி சிம்புன்" தினசரி போல் காலத்தால் பேசப்படும்.

(என்னதான் இன்டர்நெட், திறன்பேசிகளில் செய்தி தினசரிகள் பார்க்கும் வசதி வந்தாலும் அச்சு இயந்திரங்களின் வழியாக செய்தி தினசரிகளை படிப்பது என்பதே தனித்த அனுபவம் ஆகும்)

No comments:

Post a Comment