Tuesday 30 June 2015


பசுமை நடை 


 தொடர்ச்சியான அலுப்பூட்டும் ஆய்விற்கு நடுவே கொஞ்சம் இளைப்பாறலாம் என இன்று மதியம் எங்கள் தோக்கியோ அறிவியல் பல்கலைக் கழகத்திற்கு பின்புறம் உள்ள வாய்க்கால் ஓரம்  ஒரு நடை போய் வரலாம் எனச் சென்றேன். 

வாய்க்கால் கரையில் போகும் வழியில் இடது புறம் ஒரு காடு வரும், பெரும்பாலும் புதர் இருக்கும் எதற்கு வம்பு என அதற்குள் செல்வதை தவிர்த்து வந்தேன். 








சரி இன்று போய்த்தான் பார்ப்போம் என ஒற்றையடி தடத்தில் நடந்தால் 50 அடிக்குள் பெரிய காட்டு பாதை தெரிந்தது. சில பண்னை வீடுகளும் இருந்ததால் தைரியமாக அந்த சாலையின் நடந்து சென்றேன். ஏறத்தாழ மனித நடமாட்டமே இல்லாதது போல் இருந்த வனப் பகுதியில் இயற்கையான காற்றினை சுவாசித்து கொண்டு நடந்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. 

இந்த வனத்தில் மூட மனிதர்கள் விட்டுச் செல்லும் பிளாஸ்டிக், கண்ணாடி குப்பைகள் ஏதுமின்றி  பல்லுயிர் தாவரங்கள் பெருகி வளர்ந்திருந்தன. 

சென்ற இரண்டு வாரம் பெயத மழையில் முளைத்திருந்த காளான் குடைகள் ஆங்காங்கே வளர்ந்திருந்தன.  



கரிய நிறத்தில் மண்ணை குவித்து வைத்து சிறு சிறு தீவு திட்டுகளாக வனம் முழுதும் மண் குவியல் காணப்பட்டது. அதன் மேலே பறவை எச்சம் மற்றும் மரத்தில் இருந்து வீழ்ந்த பழங்கள் ஆகியவைகளில் விளைந்திருந்த சிறு செடிகள் ஆச்சரியம் அளிப்பவையாக இருந்தது. 

சரி இந்த மண் குவியல் எப்படி இங்கு வந்திருக்கும் என குச்சியில் சற்று கிளற் பார்த்தால் அந்த மண் குவியலுக்கு கீழ் பெரிய பொந்து  ஒன்று தெரிந்தது. அதில் இருந்து சற்றெ தடித்த புழு போன்ற புச்சிகள் நெழிந்து கொன்டு இருந்தன. இன்னும் சில இடங்களிம் பெரிதான மண்ணுளி வண்டுகள் ஆங்காங்கு திரிந்தன. 







வனத்தின் இடையில் பெரிய ஊரணி ஒன்று இருந்தது. சிறிய, பெரிய மீன்களிம், கொஞ்சம் நாரையும் நீரோடையில் மேய்ந்து திரிந்து கொண்டு இருந்தது. எனக்கு தெரிந்து இங்கே மனிதர்கள் வெகுவாக வருகிறார்களா என்று ஐயம் வந்து விட்டது. 


எந்த குப்பைகளும் இல்லாத மிகச் சிறந்த வனத்தினை எங்கள் பல்கலைக் கழகம் அழகாக பராமரிக்கிறது கண்டு மிகவும் ஆச்சரியம் அடைந்தேன். திரும்பி வரும் வழியில் வனத்தின் வெளிப்புறம் இருக்கும் காட்டுப் பகுதியில் நிறைய காய்கறிச் செடிகளை கூட்டுப் பண்ணை திட்டத்தில் வளர்க்கிறார்கள். முத்து சோளம், குடை மிளகாய், நீர்ப்பூசணி, சோயா மொச்சை, கத்தரி, தக்காளி ஆகிய செடிகள் எந்த உரமும் இன்றி அற்புதமாக வளர்ந்து நின்றதை சிறுது நேரம் வேடிக்கை பார்த்து விட்டு வந்தேன்.








ஆய்வகத்திற்குள் என்னதான் குளிர்சாதன வசதி இருந்தாலும் இயற்கையின் அதி அற்புதமான நிழலும், வனத்தின் குளிர்ச்சியும் ஒப்பிடவே முடியாததாய் தோன்றியது.

இனி தினமும் வனத்தின் சாலையில் 30 நிமிடம் கால்நடையாய் போய் வரலாம் என திட்டமிட்டுள்ளேன். 

Monday 29 June 2015

ஜப்பான் ஏன் கல்வியில் முன்னேறிய நாடாக உள்ளது - 2


இன்று  காலை வழக்கம் போல் எமது ஆராய்ச்சி நிலையத்திற்குள் நுழையும் போது வரவேற்பறையில் ஒட்டியிருந்த சுவரொட்டி (Poster) என் கவனத்தினை ஈர்த்தது. அதில் எனது பல்கலைக் கழக தலைவரும் எனது ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநருமான பேராசிரியர் அகிரா புசிஜிமா (Prof. Akira Fujishima) அவர்களின் புகைப்படமும், சிறிய கார்ட்டூன் நிரம்பிய  படங்களும் அச்சிடப் பட்டு இருந்தன. 







சுவரொட்டி முழுக்க ஜப்பானிய மொழியில் இருந்ததால் எங்களது காரியதரிசி ஒக்கியாமா- சன் அவர்களிடம் மொழி பெயர்த்து ஆங்கிலத்தில் சொல்லக் கேட்டேன். அத்தனை கார்ட்டூன்களும் பிரபல விஞ்ஞானிகள், ஆளுமைகள் பற்றியது என்று பிறகுதான் தெரிந்தது. 

பேராசிரியர் புசிஜிமா நிறைய சாதனையாளர்கள், அறிவியலாளர்கள் பற்றிய புத்தகங்களினை நிரம்ப வாசிப்பவர். அவ்வாறு தான் படித்த புத்தகங்களில் இருந்து மிகச் சிறந்த ஆளுமைகளை, அவர்களது சாதனைகளை, சுருக்கமாக மாணவர்களுக்கு எளிமையாக புரியும் விதத்தில் கார்ட்டூன்களாக வடிவமைத்துள்ளார். பின்னர் இதனை எல்லா அறிவிப்பு பலகைகளிலும் இடம் பெயரச் செய்துள்ளார். ஒவ்வொரு நாளும் இந்த சுவரொட்டிகளை பார்க்கும் போது மாணவர்களின் மனதில் பளிச்சென இத்தகவகல்கள் எளிமையாக சென்றடையும். 


இந்த சுவரொட்டிகளில் உலக பிரசித்தி பெற்ற நியூட்டன், ரூதர் போர்டு, ஐன்ஸ்ட்டீன் ஆகியோரோடு ஜப்பானின் பிரசித்தி பெற்ற சாதனையாளர்கள் ஹோண்டா, டயோட்டா ஆகியோரின் தகவல்களும் வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஜப்பானிய அறிவியலாளர்  மருத்துவ பேராசிரியர் கிடியோ நொகுச்சி (Hideyo Noguchi) இவர் 1911 ஆம் ஆண்டு பாக்டீரியாக்களின் விளைவினை பற்றி கண்டறிந்தவர் (இவரது புகைப்படம் ஜப்பானிய 1000 யென் பணத்தில் அச்சிடப் பட்டிருக்கும்) பற்றிய தகவலும் இடம் பெற்றுள்ளது. *உலகில் இது போன்று எந்த நாட்டிலாவது அறிவியல் விஞ்ஞானிகளை கவுரவிக்கும் பொருட்டு தாங்கள் பயன்படுத்தும் பணத்தின் மீது அச்சிட்டிருக்கிறார்களா    எனத் தெரியவில்லை. 


Prof. Noguchi image in 1000 Yen currency


சொன்னால் நம்ப மாட்டீர்கள் பேராசிரியர் புசிஜிமா எப்போதும் கையில் ஒரு சிறிய பை வைத்திருப்பார். அதில் புற ஊதா கதிர்களை உமிழும் டார்ச் ஒன்று, போட்டோ கேட்டலிஸ்ட் துகள்கள், தண்ணீர் குடுவைகள் என வைத்திருப்பார். வாரம் ஒரு ஜப்பானிய பள்ளிக்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு அடிப்படை அறிவியல் பற்றிய உண்மைகளை சோதனைகள் மூலம் செய்து காண்பித்து வேடிக்கையான விளையாட்டுகள் மூலம் விளக்குவார். பின்னர் சில நேரங்களில் அது பற்றிய அடிப்படை கேள்விகளை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உடனான சந்திப்புகளில் கேள்வியாய் கேட்பார். பதில் சொன்னால் புத்தகங்களில் கையொப்பமிட்டும் கொடுப்பார். அவரோடு பலமுறை உ.பா. அருந்தும் போது அருகில் அமர்ந்து நிறைய பல்பு வாங்கிய அனுபவங்களும் உண்டு. 



Prof. Fujishima demonstrating principle of light scattering in Skye through simple experiments to the students




Prof. Fujishima explaining the facts of basic science with Indian and Malaysian students during their cultural exchange visit at Tokyo University of Science.

மனிதர் இருக்கும் இடத்தில் கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது. திடீரென சிரித்து கொண்டே மேஜிக் மனிதராக மாறி பலகலைக் கழக பார்ட்டிகளில் அறிவியல் சோதனைகளை செய்து அசத்துவார்.

ஒளிச் சிதறல் (Light scattering) பற்றிய இவரது சோதனை விளக்கங்கள் நம்மை பிரப்பில் ஆழ்த்தக் கூடியது. 

உங்களால் ஒரு பனிக்கட்டியினை கத்தியால் வெட்ட முடியுமா எனக் கேட்பார்? யோசித்து முடியும் என்று சொன்னால் உடனே பனிக் கட்டியும், கத்தியையும் கொண்டு வரச் சொல்லி நம்ம வெட்ட சொல்லி வேடிக்கை பார்ப்பார். நாம் கத்தியால் பனிக்கட்டியினை வெட்ட சிரமப்படும்போது, திடீரென தன் பையில் இருந்து செயற்கை வைரம் பூசப்பட்ட மென் ஏடுகள் (Boron doped diamond films coated on Si substrates) பூசப்பட்ட சிலிக்கான் தகடுகளை கொண்டு பஞ்சு போல பனிக்கட்டியினை வெட்டி விட்டு சத்தமாக சிரிப்பார். 

நாமும் அதே போல் பிறகு அந்த செயற்கை வைரம் பூசப்பட்ட சிலிக்கான் தகடுகள்  கொண்டு பனிக் கட்டியினை அறுத்தால் அது வாழைப்பழத்தில் கத்தி இறங்குவது போல் எளிதாக இறங்கும். பிறகு, இது ஏன் கத்தியினை விட சிறப்பாக பனிக்கட்டியினை எளிமையாக வெட்டுகிறது என கேள்விகள் கேட்பார்?

 ஒரு முறை என்னிடம் இதே கேள்வியினை கேட்ட போது,  செயற்கை வைரப் பூச்சுகள் மிகவும் உறுதியான பொருட்களை அறுக்கும் திறன் உடையது எனப் பதில் உரைத்தேன். உடனே, அப்படியா எனச் சொல்லி விட்டு அருகில் உள்ள மரத்துண்டினை அதனை கொண்டு அறுக்கச் சொன்னார். அவ்வாறு முயற்சி செய்தபோது மரத்துண்டினை சிறிது கூட அது அறுக்கவில்லை.நான் மிகவும் குழம்பி போனேன். 

அப்போதுதான் அவர் சொன்னார், செயற்கை வைரப் பூச்சுகள் மிகச் சிறந்த வெப்பக் கடத்திகள் (thermal conductors) அவை நம் விரல்களில் மூலம் உடல் சூட்டினை வெகு வேகமாக பனிக் கட்டிக்கு கடத்தி அதனை உருக வைக்கிறது  அதனால் தான் இது பழத்தில் இறங்கும் கத்தி போன்ற தன்மையினை உணர முடிகிறது என்ற அறிவியல் உண்மையினை எளிய எடுத்துக் காட்டின் மூலம் விளக்கினார். விளையாட்டுகள் மூலம் நாம் சொல்லிக் கொடுக்கும் அறிவியல் சோதனைகள் எளிதில் பிறருக்கு சென்றடையும் என்ற உண்மையினை நான் கண் கூடாக கண்ட தருணம் அது.

இந்த சுவரொட்டிகளை போலவே, சென்ற ஆண்டு பல்கலைக் கழகத்தின் மாதாந்திர  நாட்காட்டிகளில் (Mothly Calender) ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு அறிவியல் விஞ்ஞானியின் புகைப்படங்களும் அவரைப் பற்றிய சிறு குறிப்பும் இடம் பெறும் விதத்தில் வடிவமைத்திருந்தார். அதற்கு எல்லோரிடம் நல்ல வரவேற்பு இருந்தது. 

Monthly calender of Tokyo University of Science contains Scientists information. 


இது கூட பரவாயில்லை தோக்கியோவின் பிரதான பகுதியில் உள்ள கட்சுசிகாவில் (katsushika) எங்கள் பல்கலைக் கழகத்தின் புதிய கிளைப் பிரிவில் பிரதான வாயிலில் இருந்து நூலகத்திற்கு செல்லும் 300 மீட்டர் நீளம் கொண்ட சாலையின் தரைக் கற்கள் முழுக்க அறிவியல் விஞ்ஞானிகளின் பெயர்களும் அவர்களது கண்டுபிடிப்பு மற்றும் எந்த ஆண்டு என்ற தகவல் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கற்கள் மூலம் தினமும் இச்சாலையில் நடக்கும் மாணவருக்கு குறைந்த பட்சம் பத்து அறிவியல் விஞ்ஞானிகளின் பெயர்களாவது மனதில் பதியும் எனபதில் ஐயமில்லை.

நாமும் நமது பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் விஞ்ஞானிகளின் பெயர்களையும், அவர்களது கண்டுபிடிப்புகளையும் சுவரொட்டிகளாக அறிவிப்பு பலகைகளில் வைக்கலாம். அவை வளர்ந்து வரும் அவர்களது இளம் பிராயத்தில் பசுமரத்தாணி போல் நன்கு பதியும். தற்போது அச்சுத் துறையில் நாம் வெகு தூரம் முன்னேறியுள்ளோம். தேவையற்ற விசயங்களுக்கு பிளக்ஸ் போர்டு வைக்கும் நம்மால் மாணவர்களுக்கு இது போன்ற வசதிகள் செய்து தர பெரிய செலவு ஒன்றும் ஆகி விட போவதில்லை.

ஜப்பானியர்கள் எதிர்கால சந்ததியினரை, குறிப்பாக மாணவர்களை எப்படி சிந்திக்க வைப்பது என்று செயலாற்றும் ஆற்றல் மிகு மனிதர்களை கல்லூரி, பல்கலைக் கழகத்தின் தலைவர்களாக நியமிக்கின்றனர். உலகின் முன்னேறிய திசையில் இவர்கள் பயணிக்க இதுவும் ஒரு முக்கிய காரணி ஆகும்.

தற்போதைய எங்கள் பல்கலைக் கழகத்தின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் ஒரு பெண்மணி. அவரது பெயர் பேராசிரியர் சியாகி முகாய் (Prof. Chiaki Mukai), இவர் நாசா (NASA) விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து அனுப்பப்பட்ட கொலம்பியா (Columbia - 1994), மற்றும் டிஸ்கவரி (Discovery-  1998) விண்கலத்தில் சென்று விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டவர். இதற்கு முன் ஜப்பான் விண்வெளி நிறுவனத்தின் திட்ட இயக்குநராகவும் (JAXA), அதன் பலகலைக் கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றியவர்.  இவர் தற்போது எங்கள் பல்கலைக் கழகத்தின் மாணவிகளுக்கான திறமைகளை உலகறியச் செய்யும் வகையில் உத்வேகமாக பணியாற்றி வருகிறார்.


With Prof. Chiaki Mukai, Vice President,  Tokyo University of Science at Photocatalysis International Research Center, Japan (File photo: 2014)


(சமீப காலங்களில், நம் ஊரில் உள்ள பல்கலைக் கழகத்தில் நியமிக்கப்பட்ட துணைவேந்தர்கள் எத்தையக சாதனைக்குரியவர்கள் என தகவல்களைத் தேடிப் பாருங்கள், அசந்து போவீர்கள்)


Thursday 25 June 2015

அதிக நீர் விலக்குமை தன்மையுடைய நெகிழும் உலோக வளை பரப்புகள்  

(Flexible Superhydrophobic Modified Steel Surface)


கடற்புரங்களில் உள்ள பொருட்கள், கட்டிடங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும்உலோக பூச்சுகளின் (metal coating) வாழ்நாள் தன்மை பாதிக்கபடுவதற்கு காரணம் அதன் நீர் ஒட்டுதன்மையே (hydrophilic). 

உப்பு காற்றில் இருக்கும் நீர் மூலக்கூறுகள் இத்தையக உலோக பரப்பில் நன்கு ஒட்டிக் கொள்கிறது இது நாளடைவில் அரிமானத்திற்கு (corrosion) வழி வகுக்கிறது. 

இதனை எப்படி தடுக்கலாம் என்ற ஆராய்ச்சியில் நீர் ஒட்டுதன்மை உடைய உலோகத்தின் பரப்பினை சிலிக்கா மூலக்கூறுகளின் மூலம் மாற்றி அமைப்பதனால் அதன் நீர் ஒட்டு தன்மை முற்றிலும் மாற்றப்பட்டு நீர் விலக்குமை தன்மை (superhydrophobic) பெறுகிறது என்ற விடை கிடைத்திருக்கின்றது. எளிய இரசாயன மாற்றம் செய்யப்பட்ட இரும்பு பரப்பின் உலோக பரப்பின் மீது நானோ அளவிலான இரும்பு கலவைகள் (carbon , oxygen (O), iron , aluminium , chromium and manganese) நீர் விலக்குமை தன்மையுடைய சிலிகா மூலக்கூறுகளுடன் (Si–O–CH3) நன்கு பிணைக்கப்பட்டு தாமரையின் இலை எப்படி அதிக நீர் விலக்குமை தன்மையுடன் செயல்படுகிறதோ அதைப் போல செயல்படுகிறது.  

எளிமையால் சொல்லப் போனால் பூவோடு சேர்ந்து நாரும் மணப்பது போல் இந்த சிலிகா மூலக்கூறுகள் மூலம் இரும்பின் புறப் பரப்பு பாதுகாக்கப்படுகிறது.

இந்த ஆராய்ச்சி முடிவுகளை Journal of Materials Chemistry A (http://pubs.rsc.org/en/content/articlelanding/2015/ta/c5ta02604k#!divAbstract) என்ற சர்வதேச ஆய்விதழில் வெளியிட்டுள்ளோம். 


எளிய இரசாயன மாற்றம் செய்யப்பட்ட இந்த இரும்பு உலோக பரப்புகள் கடற்புரங்களில் மட்டும் அல்லாது கட்டிடங்களின் சன்னல் கம்பிகள், பிடிகள், மற்றும் சோலார் பேனல்களின் சட்டங்கள் (solar panel frames) என எல்லாவற்றிலும் பயன்படுத்தலாம். மேலும் இவை அதிக நீர் விலக்குமை தன்மை உடையதால் தூசி, அழுக்குகள் இதன் மீது படியும் போது கொஞ்சம் நீரை ஊற்றினால் போதும்  தானாகவே சுத்தம் செய்து கொள்ளும். அல்லது மழைக் காலங்களில் நீர் திவலைகள் அதிகமான விசையுடன் இதன் புறப் பரப்பில் விலக்கப் படுவதன் மூலம் கடினமான கறைகள் கூட எளிதாக சுத்தம் செய்யப் பட்டு விடும்.



தானாகவே சுத்தம் செய்து கொள்ளுவதுடன், அரிமானத்தினையும் தடுக்கும் இந்த நெகிழும் தன்மை உடைய உலோக வளைபரப்புகள் மிகப் பெரிய கட்டிடங்களுக்கு சுவற்றில் பொருத்தினால் அந்தரத்தில் தொங்கி கொண்டு சுத்தம் செய்யும் அபாயம் எதிர் காலத்தில் இருக்காது.  மேலும் கழிவறை குழாய்கள், சமையலறை குழாய்கள் ஆகியவற்றின் உட்புறம் இத்தைகய பூச்சுகள் நல்ல பலனை தரும்.

இதன் நீடித்த தன்மை (stability) பற்றிய மேலதிக ஆராய்ச்சி தற்போது சென்று கொண்டிருக்கிறது.

நீர் விலக்குமை தன்மை உடைய இந்த பூச்சுகளின் மீது நீர்த் திவலைகள் எப்படி விலகி தாமரை இலை மாதிரி செயல்படுகிறது என்பதனை கீழ்கண்ட் காணொளியில் காணலாம்.

https://www.youtube.com/watch?v=yAjwpQS8Pog&feature=youtu.be

https://www.youtube.com/watch?v=ee-RuorQ2pQ&feature=youtu.be


Monday 22 June 2015


சூரிய மின் உற்பத்தி செய்யும் மாடுகள் (Cow mount solar system)


இனிமே உங்கள வீட்டுல மாடு மேய்க்கதான் லாயக்குன்னு திட்டுனா சந்தோசப்படுங்க.

ஆமாங்க மாடு மேய்க்கும் போதே சூரிய மின் சக்தியின் மூலம் மின் உற்பத்தி செய்யும் தொழில் நுட்பம் ஜெர்மனியில் சோதனை முறையில் வெற்றி அடைந்துள்ளது. இந்த திட்டத்திற்கு பெயர் Cow-Orientation Network (CON). அதாவது புல்வெளிகளில் மேயும் மாடுகளுக்கு முதுகில் அதிக கனமில்லாத சோலார் பேனல்கள் மாட்டி அதிலிருந்து மின் ஆற்றலை தயாரிக்கலாம். 

இந்த சோலார் பேனல்களில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தினை பேட்டரி, வயர் இல்லாமல் மைக்ரோவேவ் (microwave) நுட்பத்தின் மூலம் மின்சாரமாக மாற்றி பண்ணை செயல்பாடுகளுக்கு பயன்படுத்தலாம் அல்லது  அவற்றினை அருகில் உள்ள மின் நிலையங்களின் மின்சார தடத்தில் ஏற்றுமதி செய்யலாம் 

ஏன் பாஸ் பாவம் இந்த மாடுங்க, இது மேல இந்த சோலார் பேனல வச்சு கஸ்டப்படுத்தறதுக்கு பதிலாக வேலி ஓரம் வச்சா என்ன பிரச்சினைன்னுதான கேட்கறீங்க?

Cow mount solar power system. (PhotoCredit: www.reenergisegroup.com)

இரண்டு விசயத்த இதுல பாசிட்டிவா பார்க்கலாம். ஒன்று சோலார் பேனல்  வைக்கும் தாங்கு கம்பிகளுக்கு (solar panel mounting structure) ஆகும் செலவு மிச்சம்மற்றொன்று சூரியனின்  பாதைக்கு பக்க வாட்டில் அல்லது எதிர் திசையில்  சோலார் பேனல்கள் பொருத்தப்பட்ட மாடுகள் தொடர்ந்து நடந்து கொண்டே  புல் மேயும்போது ஒரே இடத்தில் தரையில் சோலார் பேனல்களை பொருத்தி  (static structure)  பெறும் மின்சாரத்தினை விட அதிகமான மின்சக்தியினை இந்த நடமாடும் மாடுகளின் மீது பொறுத்தப்படும் சோலார் பேனல்களில் இருந்து உற்பத்தி ஆகும்.

அதாவது இதே செயலை தரையில் பொறுத்தியுள்ள சோலார் பேனல்களில் செய்ய வேண்டுமானால் சூரியனின் திசையினை தொடர்ந்து  நகரும்  சோலார் டிராக்கர்கள் (solar trackers) எனப்படும் கருவி பொருத்த மிகப் பெரும் செலவு ஆகும். ஆகையால் இந்த நடமாடும் சோலார் பேனல்கள் ஒரு விதத்தில் அதிக மின்சக்தியினை உற்பத்தி செய்யும். 

சோலார் பேனல்களின் எடை மாடுகள் சுமக்க கூடிய வகையில் எளிமையான ஒன்றுதான், ஆகையால் மாடுகளுக்கு சிரமமாக இருக்காது. 


இந்த திட்டத்தின் மாதிரி வடிவம் (Cow-Mount mobile Solar PV installation) ஜெர்மனியில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு சந்தைக்கு வர உள்ளது.
தற்போது புற்கள் தோட்டத்தினை  கிழக்கு மேற்காக வளர்த்து அதில் மாடுகள் விடும்போது மிக அதிகமான சோலார் போட்டான்கள் சூரியனிடமிருந்து  பெறலாம் எனக் கணித்துள்ளனர். அதற்கான வேலைகள் தற்போது ஜெர்மனியில் நடைபெற்று வருகின்றது.

பாட்டரியும், வயரும் இல்லாமல் எப்படி மாட்டின் மீது பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனலில் இருந்து மின்சக்தியினை சேமிக்க முடியும்.

சோலார் பேனல்களில் இருந்து பெறப்படும் DC மின்சக்தியினை மைக்ரோஅலைகளாக  கம்பியற்ற முறையில் கடத்தி தொலைவில் உள்ள ரீசிவர் மூலம் AC மின்சாரமாக  மாற்றி  பயன்படுத்தும் ஆராய்ச்சி  தற்போது உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த நுட்பம்தான் இங்கு பயன்படுத்தப்படுகிறது


இதில் உள்ள சிக்கல் இந்த மைக்ரோஅலைகள் நுட்பம் குறைந்த தூரம்தான் நன்கு திறனுடன் வேலை செய்யும். அதனால் என்ன, மாடுகளில் பொருத்தப்பட்டுள்ள பிரத்யோக இன்வெர்ட்டரில் இருந்து DC மின்சாரம்  மைக்ரோ அலைகளாக (microwave) மாற்றம் செய்யப்பட்டு AC மின்சாரமாக குறைந்த தூரத்தில் உள்ள புல்வெளி தோட்டத்தின் வேலியில் அமைக்கப்பட்டுள்ள  மின் நிலையங்களின் மின்சார தடத்தில் ஏற்றுமதி செய்யலாம். 

குறுகிய தொலைவிற்குள்  இந்த microwave conversion into AC current சாத்தியமாகும் என்பதால் எதிர் காலத்தில் மிகப் பெரும் சந்தை வாய்ப்பு Cow-Orientation Network (CON) திட்டத்திற்கு உள்ளது

சூரிய ஆற்றல் மூலம் மாடு மேய்க்கும் ஜிபிஎஸ் நுட்பம்


அமெரிக்காவில் உள்ல எம் ஐ டி (MIT - Massachusetts Institute of Technology) கல்வி நிறுவனமும், விவசாயத் துறையும் (Department of Agriculture, USA) இணைந்து நிழல் வேலிகள் (virtual fencing) எனப்படும்  வேலியற்ற முறையில் மாடு மேய்ப்பதற்கான புதிய நுட்பத்தினை சூரிய மின் ஆற்றல் மூலம் சாதித்து காட்டியுள்ளனர்.

 சூரிய ஆற்றலில் இயங்கும் ஜிபிஎஸ் நுட்ப கருவிகள் மாட்டின் தலையில் தொப்பியாக மாட்டப்பட்டுள்ளது.


 சூரிய ஆற்றலில் இயங்கும் ஜிபிஎஸ் நுட்ப கருவிகள் மாட்டின் தலையில் தொப்பியாக மாட்டப்பட்டுள்ளது.

இந்த நுட்பத்தின் மூலம் மாடுகள் மேய்க்க ஆட்கள் தேவை இல்லை, மேலும் மாடுகள் குறிப்பிட்ட எல்லைக்குள் மேய்வதற்கான கம்பி வேலிகளும் (fencing) தேவை இல்லை.

மாடுகளின் தலையில் சிறிய ரக சோலார் பேனல்கள் பிரத்யோகமாக தொப்பியாக மாட்டப்பட்டுள்ளது. இதில்  கிடைக்கும் மின் சக்தியினை கொண்டு இதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஜிபிஎஸ் கருவியினை இயக்குகிறது. இதன் மூலம் மாடு நமது எல்லைக்குள் மேய்கிறதா என நம் இடத்தில் உள்ள சர்வர் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒரு வேளை மாடுகள் எல்லைக்கு வெளியில் மேயச் சென்றால் இது சர்வரை (computer server) தொடர்பு கொண்டு அறிவுறுத்தும் சிக்னலை பெற்று மாட்டின் தலையில் சோலார் பேனலோடு இணைக்கப்பட்டுள்ள ஒலி பெருக்கி கருவியின் மூலம் குறிப்பிட்ட ஒலியினை எழுப்பி மாடு பழைய படி பயந்து கொண்டு நமது எல்லைக்குள்ளே வந்து விடும்.அப்படியும் மசியவில்லை எனில் மெலிதான எலக்ட்ரிக் அதிர்வை மாட்டுக்கு செலுத்தும். அப்புறம் என்ன மாடு தெறித்து கொண்டு பழைய இடத்துக்கே ஓடி வந்திடும். 

எனவே இனி வங்கிக்கு போய் மாட்டு லோன் வாங்குவதாக இருந்தால்  சோலார் பேனல்கள் வாங்கறதுக்கும் ஒரு திட்டத்த போடுங்க பாஸ். 

ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிச்சிடலாம்

Sunday 21 June 2015

சூரிய மின் ஆற்றலில் இயங்கும் இரயில் நிலையங்கள் (Solar Powered Railway Station)


ஜப்பானில் இரயில்கள் தாமதமாக வருவதென்பது ஒரு வருடத்திற்கு சராசரியாக 0.6 நிமிடங்கள் மட்டுமே. அப்படியே நீண்ட நேரம் தாமதமாக வந்தால் அதற்காக அந்த வண்டியின் ஓட்டுநர் எல்லா பெட்டிக்கும் வந்து தலையினை குனிந்து மன்னிப்பு கேட்பார். மேலும் அந்த இரயில் நிறுவனத்தில் இருந்து காலதாமதம் ஆகியதற்கான ஒப்புகை சீட்டும் *Train delay certificate) கொடுத்து விடுவார்கள். இதனை வேலை பார்க்கும் அலுவலகத்தில் காண்பித்தால் மேலதிகாரியின் கண்டிப்பில் இருந்து தப்பிக்கலாம். இவையெல்லாம் ஜப்பானின் இரயில் பயணங்களைப் பற்றிய சுவையான தகவகல்கள்.

(These photos were taken in other websites and the image courtesy is given in each photos).

ஜப்பானில் இருக்கும் இரயில் நிலையங்களை பற்றிய தற்போதைய சுவாரசியமூட்டும் தகவல்களை இங்கே பகிர்கிறேன்.

ஜப்பானில் தற்கொலை விகிதம் என்பது உலக நாடுகளை ஒப்பிடும் போது, 2005 ஆம் ஆண்டின் புள்ளி விபரப்படி  தென் கொரியாவிற்கு (24.7) அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் 19.4  ஆக உள்ளது (ஒரு லட்சம் மக்களுக்கு). பரபரப்பான வாழ்க்கை, வேலையின்மை, வெறுப்பூட்டும் தனிமை வாழ்க்கை சூழல், பணிச் சுமை என தற்கொலையின் விகிதம் அச்சமூட்டுபவையாக இருக்கிறது. அது சரி இந்த புள்ளி விபரம் இப்போது எதற்கு என கேட்கிறீர்களா. காரணம் இருக்கு, சொல்கிறேன்.

இந்த தற்கொலை முடிவுகள் பெரும்பாலும் இரயில் வரும்போது அதன் முன்பு குதித்துதான் ஏற்படுகிறது என்பதுதான் வேதனையான செய்தி.   அதுவும் பரபரப்பான காலை வேளையில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது திடீரென இரயில் முன்பே குதித்து விடுவார்கள். இது போன்ற துர்சம்பவங்களால் குறைந்த பட்சம் அரை மணி நேரத்தில் அந்த வழித் தடத்தில் இயங்கும் எல்லா இரயில் வண்டிகளும் தாமதமாகும். இவ்வாறான சூழலில் சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்திடம் இருந்து பெரும் தொகை அபராதமாக இரயில் நிறுவனத்தால் நீதிமன்றத்தின் மூலம் வசூலிக்கப்படும். சரி அப்படியாவது இந்த பிரச்சினை முடிவுக்கு வந்ததா என்றால் அதுவும் இல்லை.

 என்னதான் ஜப்பான் இரயில் நிலையங்களில் பத்து அடிக்கு ஒரு கண்காணிப்பு கேமரா இருந்தாலும் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கையினை இரயில் நிலையங்களில் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆகையால் தற்போது பெரும்பாலான இரயில் நிலையங்களின் பிளாட்பாரங்களில் இரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையில் தானியங்கி கதவுகளை (automated door) அமைத்து விட்டார்கள். தென் கொரியாவில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே சியோல் சப்வே இரயில் (Seoul Subway stations) நிலையங்களில் தானியங்கி கதவுகளை அமைத்து விட்டார்கள்.

ஆனால் தலைவலி போய் திருகு வலி வந்த கதையாக நிலநடுக்க நேரத்தில் மின் வெட்டு ஏற்ப்பட்டல் இந்த தானியங்கி கதவுகள் இயங்காது. அப்படியானால் இரயிலில் இருந்து பிளாட்பாரத்திற்கு மக்கள் வெளியே வர முடியாது. என்ன செய்யலாம் என யோசித்து தற்போது பல இரயில் நிலையங்களின் மேற்கூரைகளில் சோலார் பேனல்களை நிறுவி அதிலிருந்து கிடைக்கப் பெறும் தடையற்ற மின் சக்தியினைக் கொண்டு பிளாட்பாரத்தில் உள்ள தானியங்கி கதவுகளை இயக்குகிறார்கள். மேலும்  இரயில் நிலையங்களுக்கு வருகை தரும்  வண்டிகளின் கால அட்டவணை குறித்த  தகவல்களை அறிவிக்கும் டிஜிட்டல் திரைகளையும்   இந்த சூரிய மின் சக்தியினை கொண்டு இயக்குகிறார்கள். 

 Solar power generation from roof top solar panels. This photo taken at Nagareyama Otakanomori Railway station, Japan  


Train arrival information display board. This photo taken at Nagareyama Otakanomori Railway station, Japan.

Automatic doors at platform. This photo taken at Nagareyama Otakanomori Railway station, Japan.
 Train arrived at at platform. This photo taken at Nagareyama Otakanomori Railway station, Japan.

 Automatic doors were opened after train reaching the station. This photo taken at Nagareyama Otakanomori Railway station, Japan.

Automatic doors were opened after train reaching the station. This photo taken at Nagareyama Otakanomori Railway station, Japan.

சமீபத்தில் தோக்கியோ நகரில் உள்ள அகிகாபாராவில் (Ahikabara) இருந்து சுகுபா (Tsukuba) வரை செல்லும் சுகுபா விரைவுதடத்தில் (Tsukuba Express) உள்ள நகரியமா ஒத்தகனமோரி (Nagariyama Otakanamori) இரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சூரிய மின்சக்தி உற்பத்தியினை காட்டும் டிஜிட்டல் திரையினை  கண்டு  ஆச்சர்யம் அடைந்தேன்.

இந்த இரயில் நிலையம் மிகப் பெரிய இரும்பு கூரைகளை கொண்டது. இந்த கூரை முழுவதும் தற்போது சோலார் பேனல்களை அமைத்துள்ளனர். இந்த சோலார் துணை மின் நிலையத்தின் மூலம் சராசரியாக மணிக்கு 33 கிலோவாட் மின்சாரத்தினை பெறுகிறார்கள். இயற்கையான சூரிய ஆற்றலில் இருந்து மின் உற்பத்தி  பெறப்படுவதன் மூலம் தோராயமாக 12 கிலோ கார்பன் டை ஆக்சைடு வெளியாவது தடுக்கப்படுகிறது.

இந்த சூரிய மின் சக்தியினை கொண்டு மேலே சொன்னதை போல இரயில் வரும்போது இயங்கும் தானியங்கி கதவுகளுக்கு பயன் படுத்துகிறார்கள். ஆகையால் பெரும் மின்சார செலவு சிக்கனப் படுத்தப்படுகிறது. முக்கியமாக  பேரிடர் காலங்களில் மின் வெட்டு ஏற்பட்டாலும் தானியங்கி கதவுகள் இயக்குவதில் ஒரு சிரமும் இருக்காது. 

இந்த கதவுகள் மூலம் இரயில் தண்டவாளத்தில் குதித்து தற்கொலை செய்பவர்கள், தவறி   விழுபவர்களின் எண்ணிக்கை நிச்சயமாக தடுக்கப்படும். அதில் சூரிய மின் சக்தியின் பங்கும் இருப்பது குறித்து மகிழ்ச்சியே.



Saturday 20 June 2015


சூரிய ஆற்றலில் இயங்கும் புகைப்பட நிலையங்கள் -Solar Powered Photostudio

வேலை சார்ந்த விண்ணப்பங்கள், அரசு அலுவலகங்கள், வங்கி சார்ந்த விண்ணப்பங்களுக்கு என பாஸ்போர்ட் அளவில் புகைப்படம் எடுக்க சில நேரங்களில் நாம் படும் சிரமங்கள் சொல்லி மாளாது. 

பெரும்பாலும் நம்மவர்கள் விண்ணப்பிக்கும் கடைசி நேரத்தில்தான்  புகைப்படம் எடுக்க ஓடுவார்கள். இதில் மிகக் கொடுமையான விசயம், மின் வெட்டு நேரத்தில் புகைப்பட நிலையங்களுக்கு சென்றால், மின்சாரம் வந்தவுடன் வாங்க என்று கையை விரித்து விடுவார்கள். அப்படியே மின்சாரம் இருந்தாலும் புகைப்பட நிலையங்கள் எல்லா பகுதிகளிலும் இருக்கும் என்று சொல்ல முடியாது.

ஆனால்  ஜப்பானில்  அவசரமான நேரத்தில் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள் எடுக்க சிரமமே இருக்காது. 

பெரும்பாலும் இரயில் நிலையங்களின் அருகில் உள்ள தெருக்கள், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் சிறிய கூண்டு வடிவில் புகைப்பட நிலையங்கள் (Mobile Photostudio) வைக்கப்பட்டிருக்கும். இதனுள் இணைக்கப்பட்டிருக்கும் தானியங்கி புகைப்பட கருவியின் முன் நாம் அமர்ந்து எளிதாக எடுத்துக் கொள்ளலாம். புகைப்படத்திற்கு தேவையான பணத்தினை அதில் உள்ள இயந்திரத்தில் போட்டு  விட்டால் எடுத்து முடித்த பின் 10 வினாடிகளில் புகைப்படங்கள் கைக்கு வந்து விடும். தோராயமாக 6 புகைப்படங்களுக்கு 600 யென் செலவாகும் (300 ரூபாய்). இத்தொகை தொகையினை வெளியில் உள்ள புகைப்பட நிலையங்களுக்கு சென்று எடுக்கும்  தொகையோடு ஒப்பிடும் போது நான்கில் ஒரு பங்குதான் என்பது கூடுதல் சிறப்பு.

சமீபத்தில் தோக்கியோ நகரில் அகிகாபாரா (Akihabara) பகுதியில் பார்த்தபோது சோலார் பேனல்களின் மூலம் இயங்கும் உடனடி புகைப்பட நிலையத்தினை (solar powered mobile photostudio) பார்த்தேன். இதன் கூரையில் இணைக்கப்பட்டுள்ள சோலார் பேனலில் இருந்து பெறப்படும் மின்சக்தியின் மூலம் இந்த புகைப்பட நிலையத்தில் இருக்கும் டிஜிட்டல் புகைப்பட கருவி, புகைப்படம் அச்சு செய்யும் இயந்திரம், மின் விளக்குகள், வெளியில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பர பலகை ஆகியவை இயங்குகின்றன. இந்த சோலார் பேனலில் இருந்து எவ்வளவு மின்சாரம் பெறப்படுகிறது என்பதனை வெளியில் வைக்கப்பட்டிருக்கும் டிஜிட்டல் திரையில் (Digital  display)  பார்க்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. 

இயற்கையில் கிடைக்கும் சூரிய மின் ஆற்றலில் இயங்குவதால் இந்த புகைப்பட நிலையத்திற்கு எப்போது வேண்டுமானாலும் நம்பி செல்லலாம். 



Solar powered mobile photostudio (Akihabara, Electric town exit)

Sunday 14 June 2015

 சூரிய ஆற்றல் – ஜப்பான் சொல்லும் நவீன பாடம் (Part 2)


(Be Positive மின் இதழில் வெளியான எனது கட்டுரையின் இரண்டாம் பகுதி. நன்றி; விமல், ஆசிரியர், Be Positive Magazine).

-------------------------------

ஜப்பானின் நிலப் பரப்பு மிகவும் குறைந்த அளவு இருப்பதால் தன்னிடம் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் மிதவை சூரிய மின் சக்தி நிலையங்களை அமைக்கத் தொடங்கி உள்ளார்கள். சமீபத்தில் கதோ (Kato) நகரத்தில் உள்ள நிசிகிரா (Nishikara) மற்றும் கிகாசிகிரா (Kihashikara) ஏரியின் மீது பிரம்மாண்டமான மிதவை சூரிய மின் உற்பத்தி நிலையத்தினை கியோசிரா நிறுவனமும், தோக்கியோ லீசிங் நிறுவனமும் இணைந்து நிர்மானித்து உள்ளார்கள்.

இதனை கட்டுவதற்கு ஏழு மாதம் ஆகியிருக்கிறது. இந்த மின் உற்பத்தி நிலையமானது 11250 சோலார் பேனல்களை கொண்டு 3300 மெகாவாட் மின் உற்பத்தியினை கொடுக்கும் விதத்தில் அமைக்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மின் உற்பத்தி மட்டுமல்ல, ஏரி நீரானது கோடை காலத்தில் ஆவியாவதும் தடுக்கப்படுகிறது. சூரிய மின் கல மிதவைகள் தண்ணீரில் மூடி உள்ளதால் இதன் அடியில் நிழற்பாங்கான பகுதியில் மீன்கள் உண்ணும் ஆல்கி (Alge) தாவரங்களும் நன்கு வளர்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

தற்சமயம் மிகப் பெரிய சோலார் மின் உற்பத்தி நிலையங்களில் சோலார் பேனல்களின் கீழ் தோட்டங்கள் அமைத்து காய்கறிகளை விவசாயம் செய்யும் ஆய்வு உத்திகள் முன்னெடுக்கப்பட்டு வெற்றியும் கண்டுள்ளார்கள். இதன் மூலம் சோலார் பேனல்களை சுத்தம் செய்யும் நீரானது வீணாகாமல் அதன் அடியில் இருக்கும் காய்கறி தோட்டத்திற்கு பாய்ச்சப்படும். இதன் மூலம் நீரை வீணாக்காமல் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடித்துள்ளனர் ஜப்பானியர்கள்.

மழை பெய்தால், மேக மூட்டமாக இருந்தால் சூரிய மின்சக்தி கிடைக்காது போன்ற எளிய கேள்விகள் நம்மில் பெரும்பாலானோருக்கு உள்ளது. ஜீரோ டிகிரி நிலவும் பனி பெய்யும் குளிர் காலத்தில்  கிடைக்கும் மிகக்குறைவான சூரிய  ஒளியின் (30 வெபர்/மீட்டர்3) மூலம் 30 கிலோ வாட் சூரிய மின் உற்பத்தி செய்யும் நிலையங்கள் ஜப்பானில் உள்ளது (மேலுள்ள படத்தில் காண்க).




Recent Solar power projects in Japan.

குளிர் காலத்தில் சூரிய ஒளியானது ஜப்பானில் குறைவாகவே இருக்கும். எனவே சூரிய வெளிச்சம் எப்போதும் கிடைக்கின்ற வான்வெளியில் இருந்து ஏன் சூரிய மின் உற்பத்தி செய்து அதனை பூமிக்கு ரேடியோ அதிர்வலைகளாக மாற்றம் செய்து அனுப்பக் கூடாது என்ற ஆராய்ச்சியில் ஜப்பான் விண்வெளி நிறுவனம் (Japan Aerospace Exploration Agency-JAXA) களத்தில் இறங்கியது.

இந்த நுட்பத்தின் மூலம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சூரிய மின்சக்தியின் (solar powered satellites) மூலம் இயங்கும் செயற்கை கோள்களைப் போல் விண்வெளியில் அமைக்கப்படும் பெரிய அளவிலான சூரிய மின்சக்தி செயற்கோள்கள் மூலம் 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு ஜிகாவாட் மின் உற்பத்திக்கான எதிர்கால திட்ட விதையினை தற்போதே விதைத்துள்ளது.

இதன் சோதனை முயற்சியாக இந்த ஆண்டு மார்ச் மாதம் JAXA மற்றும் மிட்சுபிக்சி நிறுவனமும் இணைந்து 10 கிலோவாட் சூரிய மின் சக்தியினை கம்பிகளற்ற முறையில் (wireless) மைக்ரோஅலைகளாக மாற்றி 1.8 கிமீ அனுப்பி அவற்றினை ஆன்டெனாக்கள் (receiver antenna) மூலம் பெறப்பட்டு மீண்டும் மின்சக்தியாக மாற்றி சாதனை படைத்துள்ளனர். இது மின்சக்தி கடத்தும் (power transmission) துறையில் இனி வரும் காலங்களில் மிகப் பெரிய புரட்சிக்கு இச்சோதனை முன்னோடியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

மிகப் பெரிய சூரிய மின் சக்தி திட்டங்கள் ஒருபுறம் இருக்க, அன்றாட வாழ்க்கை சூழலில் மக்களின் தேவைக்கும் சூரிய மின் சக்தியினை பயன்படுத்த ஆரம்பித்தது ஜப்பான் அரசு. ஒரு முறை தோக்கியோவில் உள்ள அகிகாபாரா கடைத் தெருவிற்கு சென்றபோது அங்கிருக்கும் சாலையோர சிக்னல் கம்பங்கள் சூரிய மின்சக்தியின் மூலம் இயக்கும் வகையில் அமைத்து இருந்தார்கள். மேலும் ஜப்பானின் பெரும்பாலான தெரு சந்திப்புகளில் வாகன விபத்தினை தடுக்க, வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் விதத்தில் தார் சாலைகளில் சூரிய மின் சக்தியின் மூலம் இரவில் ஒளிரும் சிகப்பு எல்ஈடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

பகலில் சூரிய மின் சக்தியினை இதில் இணைக்கப்பட்டுள்ள சிறிய வடிவிலான பேட்டரிகள் சேமித்து வைத்துக் கொண்டு இரவில் விளக்குகளுக்கு மின்சக்தியினை வழங்குகிறது. ஜப்பானில் ஏற்பட்டுள்ள எல்ஈடி துறையின் விஞ்ஞான சாதனைகளும், உற்பத்தி புரட்சியும் இது போன்ற புதுமை திட்டங்களுக்கு நன்கு கை கொடுக்கின்றது. (2014 ஆம் ஆண்டில் நீல நிற எல்ஈடி கண்டுபிடிப்பிற்காக மூன்று ஜப்பானிய பேராசிரியர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது).

தற்போது சூரிய மின் சக்தியின் மூலம் இயங்கும் தானியங்கி குளிர்சாதனங்களை தோக்கியோ நகர தெருக்களில் காணமுடிகிறது. பேரிடர் காலங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் போது கூட இந்த தானியங்கி இயந்திரங்கள் சூரிய மின்சக்தியின் மூலம் இயங்குவதால் மக்களுக்கு இது பெரும் வரப் பிரசாதம் ஆக இருக்கிறது. இது தவிர சூரிய மின்சக்தியின் மூலம் ஒளிரும் பேருந்து நிழற் குடைகள், சாலை ஓரங்களில் தட்பவெப்பநிலை மற்றும் காற்றின் ஈரப்பதம் போன்றவற்றினை காட்டும் உணர்விகள் (sensors) சூரிய மின் சக்தி மூலம் பேட்டரிகள் துணையுடன் இயங்குகிறது. தோக்கியோவின் மியோதன் (Myoden) பகுதியில் உள்ள சாலை ஓரங்களில் உள்ள செடிகள் வண்ண ஒளியில் சூரிய மின் சக்தி மூலம் இரவிலும் ஒளிர்கிறது.

தற்போது ஜப்பானில் உள்ள தோபு உயிரியல் பூங்காவில் (Tobu Zoo, Japan) சிறிய ரக சோலார் பேனல் மூலம் இயங்கும் சுற்றுலா தகவல் விளக்க வழிகாட்டிகள் நிறுவப்பட்டுள்ளது (solar powered audio tour guide). சூரிய ஒளி மூலம் இயங்கும் இந்த இயந்திரத்தில் 100 யென் காசைப் (சுமார் 50 ரூபாய்) போட்டவுடன் இதில் இணைக்கப்பட்டுள்ள ஹெட்போனில் அந்த கருவிக்கு முன்னால் உள்ள உயிரினங்களை பற்றிய தகவல்களை கேட்கலாம். இதன் மூலம் மின்சாரம் சேமிப்பதுடன் நல்ல வருமானமும் கூட. இதே போன்று நமது ஊரிலும் காசை போட்டுச் சூரிய மின் சக்தியில் இயங்கும் மொபைல் போன் ரீசார்ஜர் நல்ல பயனளிக்கும். இவற்றினை பொது மக்கள் புழங்கும் பேருந்து நிலையம், ரயில் நிலையம் என வைத்தால் அரசுக்கு நல்ல வருமானமும் வரும்.

இது தவிர சூரிய ஒளியின் மூலம்  போட்டோ கேட்டலிஸ்ட்கள் (photocatalyst) துணை கொண்டு குடி நீரை சுத்திகரித்தல், காற்றில் உள்ள கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு போன்ற  நச்சு வாயுவினை சுத்திகரிப்பு செய்தல் போன்ற புதிய நுட்பங்களும் வந்து விட்டது.

கட்டிடங்களுக்கு வருடா வருடம் வண்ணம் பூசாமல் சூரிய ஒளி மற்றும் காற்றில் உள்ள ஈரப்பதம் இவற்றின் மூலம் தானாகவே சுத்தம் செய்து கொள்ளும் (self-cleaning coating) அதி நீர் ஒட்டுமை தன்மை கொண்ட (super hydrophilic) டைட்டானியம் ஆக்சைடு பூச்சுகள் மூலம் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பளிச்சிடும் வகையில் நானோ பூச்சுகளை (nano-coating) ஜப்பானியர்கள் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். இதன் மூலம் பெரும் பொருட் செலவும், மனித உழைப்பும் சேமிக்கப்படுகின்றது.


இந்த புதிய வெற்றியின் சூட்சுமம் சூரிய ஆற்றலை கவரும் நீடித்த தன்மை கொண்ட குறைகடத்திகளை (semiconductors) கண்டறியும் ஆராய்ச்சியினை வெகு நேர்த்தியாக ஜப்பான் முன்னெடுத்து சென்றது. இதன் கூடவே, புதிய நுட்பங்களை மக்கள் ஊக்குவிக்கும் விதம் என இந்த இரண்டு காரணங்களும், இன்று ஜப்பான் நாட்டினை சூரிய ஒளியினை பயன்படுத்துவதில் உலகின் முன்னோடி நாடாக உயர்த்தி பிடித்துள்ளது.

Recent Solar power projects in Japan. Self cleaning TiO2 coating at Photocatalysis International Research Center, Tokyo University of Science, Japan. 


நம் இந்திய தேசத்தினையும் உலக அரங்கில் சூரிய ஒளியின் மூலம் மாசற்ற, மரபு சார எரிசக்தியாக மாற்றுவதில் முன்னோடி நாடாக மாற்றிட மக்களாகிய நாம்தான் அரசுக்கு பக்க பலமாக நின்று உதவ வேண்டும்.

அதற்கு முன்பாக வெகு சன மக்கள் புழங்கும் இடங்களில் சூரிய மின்சக்தியின் மூலம் சிறிய கருவிகளை அரசு நிறுவி அவர்களுக்கு சூரிய மின்சக்தியின் மீதான நம்பகதன்மையினையும், விழிப்புணர்ச்சியினையும் கொண்டு வர வேண்டும். பொறியியல் பயிலும் கல்லூரி மாணவர்கள் சூரிய மின் சக்தியின் மூலம் இயங்கும் புதிய கருவிகளை வடிவமைத்து குறைந்த விலையில் மக்களுக்கு பயன்படும் வகையில்சந்தைப்படுத்தலாம்.

முனைவர். பிச்சைமுத்து சுதாகர்
தோக்கியோ அறிவியல் பல்கலைக் கழகம்
ஜப்பான்

---------------------------

http://bepositivetamil.com/?p=1083

சூரிய ஆற்றல் – ஜப்பான் சொல்லும் நவீன பாடம் (Part 1),
முதல் பகுதியினை படிக்க http://bepositivetamil.com/?p=1006


Saturday 13 June 2015


விதை உருண்டைகள் - Seed balls

இன்று செடி விதைகள் வாங்க இனகாயா (Inagaye) அங்காடிக்கு சென்றிருந்தேன். காய் கறி, பூச்செடிகளின் விதைகளை பாக்கெட்டில் விற்கிறார்கள். பாக்கெட்டின் பின்புறம் எந்த பகுதியில் இருந்து விதை கொண்டு வரப்பட்டது என்ற தகவலும் தரப்பட்டுள்ளது.

 விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் விதை பைகள்

  விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் விதை பைகள்

  விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் விதை பைகள், விதைகளை எப்படி நடவு செய்யலாம் மற்றும் பிற தகவல்களை காணொளியாகவும் சிறிய டிஜிட்டல் டிவியில் காண்பிக்கப்படுகிறது.

 விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் விதை பைகள்

இதில் என்னை அதிகம் கவர்ந்தது. நன்கு செய்நேர்த்தி செய்த  விதைகள் அப்படியே களிமண், மற்றும் வைக்கோல் மற்றும் இதர நுண் ஊட்டச் சத்துகள் கலந்த உருண்டைகளாக (Seed Balls) பேக்கிங்குகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. 


விதை உருண்டைகள்

 விதை உருண்டைகள்


விதை உருண்டைகள்
தகவல் விபரங்கள்

 ஸ்ட்ராபெர்ரி செடி  விதை உருண்டைகள்

ஒவ்வொரு உருண்டையிலும் நிறைய விதைகள் இருப்பதால் வளர்ந்த பின் நிறைய செடிக் கன்றுகள் கிடைக்கும். ஓரளவிற்கு வளர்ந்தவுடன், கன்றுகளை பிரித்து தனித்தனியே நடவு செய்யலாம். அட்டையின் பின்புறத்தில் எப்படி நடவு செய்ய வேண்டும். செடிக்கு தேவைப்படும் தட்ப வெப்ப நிலை, எவ்வளவு காலம் செடி வளர எடுத்துக் கொள்ளும்,  என எல்லா தகவலும் தரப்பட்டுள்ளது. 

இவை நில உருண்டைகள் (earth dumplings) என்னும் முறையில் தயாரிக்கப்படுபவை. இம்முறையினை  ஜப்பானிய இயற்கை விவசாயத்தின் முன்னோடியான மசினோபு புகோகா (Masanobu Fukuoka) அவர்கள் இந்த உத்தியினை அறிமுகப்படுத்தி மிகப் பெரிய அளவில் ஜப்பானில் தரிசு நிலங்களில் செடிகளை அறிமுகப் படுத்தினார்.




மசினோபு புகோகா-சன் இயற்கை விவசாய புரட்சியாளர்

 விதை உருண்டையிலிருந்து முளையும் செடிகள்

விதை உருண்டையிலிருந்து முளையும் செடிகள்

இதே போல நமது பாரம்பரிய நாட்டுரக செடி விதைகளை நேர்த்தி செய்து விதை உருண்டைகளாக பேக்கிங் செய்து விற்கலாம். தற்போது நகரங்களில் மாடி தோட்டங்கள் மற்றும் வீட்டு தோட்டங்கள் பெருகி வரும் சூழலில் இது மிகவும் எளிதான முறையில் செடிகள் வளர்க்க உதவும். மேலும் அழிந்து வரும் நாட்டு ரக செடி விதைகளை காப்பாற்றி மக்களுக்கு கொண்டு செல்லலாம்.

 தற்போது பன்னாட்டு விதை நிறுவனங்கள் தங்களது மரபணு மாற்றம் செய்த விதைகளை பரவலாக விற்பனை செய்து வருகிறது. இத்தையக சூழலில் இது போன்ற உத்திகள் நம் மண்ணின் பாரம்பரிய விதைகளை காப்பாற்றி மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெரும் பயன் அளிக்கும்.   

விதை உருண்டைகளை வெளியில் இருந்து பார்க்கும் வண்ணம்   குமிழ்களில் அமைக்கப்பட்ட இந்த உறைகள் வித்தியாசமாக மக்களை எளிதில் சென்றடையும்.  இந்த விதை உருண்டைகளை கிராமப்புற பண்ணைகளில் தயார் செய்து  சிறு மற்றும் பெரு நகரங்களுக்கு விற்பனை செய்யலாம்.